வடக்கில் ஆயுதக் குழுவினருக்கு அனுமதியில்லை

அடுத்த மாதம் நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சி தேர்தல்களில் எந்தவொரு அரசியல் கட்சியும் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப்படமாட்டாது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலிகளிடமிருந்து வடபகுதி முற்றாக மீட்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக யாழ் மாநகரசபைக்கும், வவுனியா நகரசபைக்கும் எதிர்வரும் 8ம் திகதி தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் பிரசார நடவடிக்கைகளின் போது எந்தவொரு குழுவினரும் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என வடபிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமால் லியூகே தெரிவித்தார்.

“யாருக்காவது பாதுகாப்புத் தேவைப்பட்டால் பாதுகாப்புத் தரப்பினர் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவார்கள்” என அவர் குறிப்பிட்டார். வடபகுதியில் சட்டம் ஒழுங்கைப் பொலிஸார் உறுதிப்படுத்துவார்கள் என அவர் கூறினார்.

இதேவேளை, வடபகுதித் தேர்தலில் சுதந்திரமான தேர்தல் பிரசாரங்களுக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில் அரச பயங்கரவாதம் தலைதூக்கியிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

பொலிஸார் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதுடன், ஏனைய கட்சிகள் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க முற்படும்போது ஆயுதக் குழுவினரால் அச்சுறுத்தப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் ஏற்பாட்டாளரும் வடமத்திய மாகாணசபை உறுப்பினருமான ரோஹண கமகே கூறியுள்ளதை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முற்றாக மறுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply