வவுனியா யாழ்ப்பாணம் தேர்தல் நடவடிக்கைகளில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளோ அசம்பாவிதங்களோ இல்லை: வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர்
வவுனியா,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளோ அல்லது அசம்பாவித சம்பவங்களோ இல்லை என வடபிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே.வவுனியா நகர சபையில் போட்டியிடும் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சந்தி்ப்பின் பின்னர் அந்தப் பிரதிநிதிகளின் முன்னிலையில் செய்தியளார்களிடம் அவர் கருத்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பு வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் யுத்தம் முடிவடைந்த பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தலாகிய இந்தத் தேர்தல் எந்தவிதமான அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் நடைபெறுவதற்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தெரிவித்தார்.
வவுனியாவிலோ, யாழ்ப்பாணத்திலோ தேர்தல் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், இது தொடர்பில் ஒரு முறைப்பாடு கூட செய்யப்படவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
“வேட்பாளர்கள் எவருக்கேனும் பொலிஸ் பாதுகாப்பு தேவைப்பட்டால் அதனை வழங்க பொலிஸார் தயாரக இருக்கின்றார்கள். வவுனியா நகரைப் பொருத்தமட்டில் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெறும் இடத்திற்கு பொலிஸார் விரைந்து செல்லத்தக்க வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நகரில் இரவு 12 மணிவரையிலும் அனைத்து இடங்களிலும் பொலிஸார் அதியுயர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் எனவே வேட்பாளர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தேர்தல் கட் அவுட்டுகள் வைக்கப்படுவது சட்டத்திற்கு முரணானதாகும். இத்தகைய கட் அவுட்டுகளை பொலிஸார் அகற்றியுள்ளனர்.
தேர்தல் முறைகேடுகளில் எவரேனும் ஈடுபட்டால் அதுகுறித்து உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட வேண்டும், அவ்வாறு அறிவிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதி்ராகக் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் தயார் நிலையில் இருக்கின்றார்கள்.
அமைதியான முறையில் அடாவடித்தனங்களின்றி கட்சிகள் தமது தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளலாம். ஆயுதக்குழுக்கள் என்று யாருமே இங்கில்லை. ஆயுதம் வைத்திருப்பதற்கு அதிகாரமளிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே ஆயுதங்கள் உள்ளன. வேறு யாரிடமும் இங்கு ஆயுதங்கள் கிடையாது. வடக்கில் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் அட்டகாசம் இருப்பதாக கொழும்பு ஊடகங்களில் வெளியாகியிருந்த தகவல்களில் எந்தவிதமான உண்மையும் கிடையாது.
பிரச்சினைகள் இருந்தால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வேண்டும். பொலிஸார் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பார்கள். கட்சிகளோ வேட்பாளர்களோ வெறும் வதந்திகளைப் பரப்பக்கூடாது” என்றார் வடபிராந்திய சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே.
சுவரொட்டிகள் ஒட்டும் போது சில ஆயுதமேந்தியவர்களிடமிருந்தும், அரச பயங்கரவாதிகளிடமிருந்தும் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் பிரதிநிதி ஒருவர் கருத்து தெரிவித்ததையடுத்து, அது சம்பந்தமாக பொலிஸாரிடம் முறையிட்டால் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாகத் தெரிவித்த வடபிராந்திய சிரேஸ்ட பிராந்திய பிரதி பெரலிஸ் மா அதிபர் லியுகே, அரச பயங்கரவாதிகள் என்று எவரும் கிடையாது என்றும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினருமே இருக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டிய அவர், பொலிஸாருக்குக் கட்சி பேதங்கள் எதுவும் கிடையாது என்பதால் கட்சி பிரதிநிதிகள் கருத்துக்களை முன்வைக்கும் போது தமது வார்த்தை பிரயோகங்களை மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சுவரொட்டிகளை ஒட்டுகையில் எதிர்க்கட்சிக்காரரிடமிருந்து சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக சில கட்சிப் பிரதிநிதிகள் தெரிவித்தபோதிலும், அவைகள் பெரிய விடயங்கள் அல்ல என்பதால் அவை குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் முறையிடவில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பில் பொலிஸ் தரப்பில் வடபிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியுகே தலைமையில் வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜே குணவர்தன, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஜி.குலரட்ண, வவுனியா தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் சிகேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply