எகிப்தில் பொதுநலவாய முதல் பெண்மணிகள் மாநாடு: சிரந்தி ராஜபக்ஷ பங்கேற்பு

பொதுநலவாய நாட்டுத் தலைவர்களுடைய முதல் பெண்மணிகள் மாநாடு நேற்று முன்தினம்  எகிப்தில் ஆரம்பமானது. இலங்கை சார்பாக ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ இந்த மாநாட்டில் பங்குபற்றினார்.பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் பாரியார்களின் மாநாடு நடைபெற்றது. பொதுநலவாய நாட்டுப் பெண்களின் நலன் குறித்தும் உலக பொருளாதார நெருக்கடி, பயங்கரவாதப் பிரச்சினை, பெண்கள் மீதான அடக்குமுறை, சமூகப் பிரச்சினைகள் என்பவற்றில் பெண்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு உரையாற்றிய முதல் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ: 21 ஆம் நூற்றாண்டு ஆரம்பமானது முதல் பல மோசமான சவால்களுக்கு முகம்கொடுக்க அங்கத்துவ நாடுகளுக்கு நேரிட்டதாகக் கூறினார். பொருளாதார, நிதி நெருக்கடி, எரிசக்தி நெருக்கடி, உணவு நெருக்கடி, வரட்சி, சூறாவளி போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதோடு, இவற்றினால் பெண்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலன்களை மேம்படுத்த இந்த மாநாட்டில் உலகத் தலைவிகள் இணக்கப்பாட்டுக்கு வந்தது குறித்து பாராட்டு தெரிவித்த சிரந்தி ராஜபக்ஷ, இலங்கை அரசாங்கம் மேற்படி பிரச்சினைக்கு முகம்கொடுக்க வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சுனாமி அனர்த்தத்திற்கு முகம்கொடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் பெண் அமைப்புகள் முக்கிய பங்காற்றின. ஜனாதிபதி நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்துள்ள நிலையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களையும் யுத்த பயிற்சி வழங்கப்பட்ட சிறுவர்களையும் புனரமைக்கவும் கல்வி புகட்டவும் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது எமது பிரதான நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சிறுவர்களின் நலன்களைப் பேணுவதற்கென ‘சிரிலிய செவன’ பாதுகாப்பு மத்திய நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அதனூடாக அவர்களுக்கு கல்வி அறிவு வழங்கவும், உரிய பாதுகாப்பு வழங்கவும் உள்ளதாகவும் சொன்னார். மேற்படி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது குறித்து சிரந்தி ராஜபக்ஷ எகிப்திய ஜனாதிபதியின் பாரியாருக்கு நன்றி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply