சமாதானத்தை நிலைநாட்டுவதிலும் இலங்கை ஜனாதிபதியால் வெற்றிபெற முடியும் இந்தியப் பிரதமர்

புலிகளுக்கும் அவர்களது பயங்கரவாத நடவடிக்கைளுக்கும் எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்; நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டுவதிலும் வெற்றிபெற முடியும். அவரிடம் காணப்படும் ஆழ்ந்த திறமைகள் இலங்கையில் மிக நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினையை நிரந்தரமாகவே தீர்ப்பதற்கு உதவும் என இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் நேற்றுத் தெரிவித்தார். எகிப்தின் ஷார்ம் அல்ஷெய்கில் நடைபெற்ற 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டை தொடர்ந்து இடம் பெற்ற இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையேயான இருதரப்பு பேச்சு வார்த்தையின் போதே கலாநிதி மன்மோகன் சிங் இவ்வாறு  தெரிவித்தார்.

முரண்பாட்டுக்குப் பிந்திய இலங்கையில் தமக்கு முன்னுள்ள பணிகளை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ள இயலுமைகள் குறித்து தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும் தற்போதைய சூழ்நிலையில் எதனைச் செய்ய வேண்டும் என்ற ஒரு தெளிவான தொலை நோக்கும் அவரிடம் காணப்படுவதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்தார்.

இருநாடுகளின் தலைவர்களுக்கி;டையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள், அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான முன்மொழிவுகள், இலங்கையின் வடபகுதிக்கடலில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே தொடர்ந்து இருந்துவரும் கூட்டுறவு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.

புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதன் முதலாக இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்ட இந்திய உயர் மட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது போன்று வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை 180 நாட்களில் மீள்குடியேற்றுதல் என்ற இலக்கை அடைவதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமரிடம் உறுதியளித்தார்.

அரசாங்கம் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் மிகுந்த அக்கரை செலுத்திவருகின்றது. என்றாலும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக கண்ணிவெடிகள் மற்றும் ஏனைய அபாயங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் புதிய வாழ்வாதார சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் முயற்சித்துவருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் மிகுந்த முன்னுரிமையளித்து வருகின்றது என்றும் பயங்கரவாதத்தின் காரணமாக எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளும் இடம்பெறாது மிக நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு வந்த வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக விஷேட கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இலங்கை இவ்விரு மாகாணங்களையும் பொருளாதார அபிவிருத்திக்கான புதிய பிரதேசங்களாகப் பார்க்கின்றது. முதலீட்டுக்கான பல புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் இந்தியா முதலீடுசெய்வது இரு நாடுகளுக்குமே பயனுள்ளதாகும்.

இலங்கையின் வடபகுதி கடலில் இரு நாடுகளின் மீனவர்களுக்குமிடையே ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து இரு நாட்டு தலைவர்களும் உடன்பட்டதோடு இப்பிச்சினையை மனுதாபிமான அடிப்படையில் அனுக வேண்டும் எனவும் அவர்கள் உடன்பட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply