சர்வதேச அழுத்தங்களை வெற்றிகொள்ள மக்கள் அரசுக்கு ஆதரவு நல்க வேண்டும்

சர்வதேச அழுத்தங்களை வெற்றிக்கொள்வதற்காக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் முழுமையாக ஆதரவு நல்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.எமது பாதுகாப்பு படையினர் உயிர்த் தியாகங்களை மேற்கொண்டு பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்த நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.ஊவா மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், பட்டதாரிகள், கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெலவத்தை சீனித் தொழிற்சாலை முன்றலில் நேற்று சந்தித்தார். இச்சமயம் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

சர்வதேச அழுத்தங்களை வெற்றிகொள்ள வேண்டுமானால் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் திருப்திகரமானது என்பதை நாட்டு மக்கள் உலகுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார். நீண்டகாலமாக தொடர்ந்த பிரச்சினைகளுக்கு ஓரிரண்டு வருடங்களில் முழுமையான தீர்வைக் கண்டுவிடமுடியாது. அவ்வாறு எதிர்பார்ப்பதும் சரியல்ல. நாடு மீட்கப்பட்டு அபிவிருத்தியின் பயணம் ஆரம்பமாகியுள்ளது. விரைவானதும் தெளிவானதுமான இப்பயணத்தில் வெற்றி இலக்கை நோக்கிப் பயணிக்க சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊவா மாகாண ஆசிரியர்கள், பட்டதாரிகள், கிராம சேவகர்கள் உள்ளிட்ட அரசாங்க ஊழியர்கள் முன்வைத்த பிரச்சினைகளைக் கேட்டறிந்த ஜனாதிபதி, சகல துறைகள் சம்பந்தமாகவும் முழுமையான கவனம் செலுத்தப்படுமெனவும் கூறினார். ஊவா மாகாணத்தைப் போன்ற கஷ்டப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே தமது பிரதான நோக்கம். சர்வதேசத்தின் அழுத்தங்கள் இன்னும் முடிந்துவிடவில்லை. எம்மவர்களே அதற்குத் துணைபோகின்றார்கள். சர்வதேச நீதிமன்றத்திற்கு மனித உரிமை சம்பந்தமாக விபரங்களைத் திரட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்கள் எம்முடன் இருக்கும்வரை எதனையும் எம்மால் வெற்றிகொள்ள முடியும். முன்னைய அரசாங்கங்கள் நகர்ப்புற அபிவிருத்தியிலேயே கவனத்தைச் செலுத்தி வந்துள்ளன. எமது அரசாங்கம் கிராமமட்ட அபிவிருத்திக்கே முன்னுரிமையளித்து வருகின்றது.

கிராமப் புறங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை சம்பந்தமாகப் பிரச்சினைகள் உள்ளன. எமது அரசாங்கம் போதியளவு ஆசிரிய நியமனங்களை வழங்கியுள்ளது. இப்போது இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சேவையில் உள்ளனர். இவர்கள் பிரதேசங்களுக்கு முறையாகப் பகிரப்படாமையே பிரச்சினைக்குக் காரணம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அமைச்சர்கள் அநுர பிரியதர்ஷன யாப்பா, கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜோன் செனவிரத்ன, ராஜித சேனாரத்ன, ஜகத் புஷ்பகுமார, எஸ். எம். சந்திரசேன மற்றும் மாகாண முதல்வர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் நாம் வாக்கு பற்றிச் சிந்திக்காது நாட்டைப் பற்றிச் சிந்திப்பது அவசியமாகும். இதற்காக பொதுத் தீர்மானங்களை மேற்கொள்வதும் அவசியமாகும். பல்வேறு சவால்கள் விமர்சனங்களுக்குள்ளேயும் நாம் எமது பயணத்தை நிறுத்திவிடவில்லை.

பல வருடங்களாக நாடு அபிவிருத்தியில் பின்னடைவைக் கண்டிருந்தது. நாடு துண்டாடப்படு வதற்காக கையொப்பமிடப்பட்ட காலமொன்றும் இருந்தது. நாம் பதவியேற்று நான்கு வருடங்களுக்குள் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. நான் தொடர்ச்சியாகக் கூறுவது தான் நாம் மேற்கொண்ட யுத்தம் தமிழ் இனத்துக்கு எதிரானதல்ல. அவர்களை மீட்பதற்காக பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் இது. இதற்காக நாம் சில தியாகங்களைச் செய்யவேண்டி யிருந்தது. எல்லா நிலையிலும் நாம் மக்களோடு இருந்தோம். நாட்டைப் பாதுகாப்பதற்காக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மக்கள் பதிலளித்துள்ளனர். நான் எனது புதல்வரையும் படைக்கு அனுப்பினேன். இன்று எம் முன் முக்கிய பொறுப்புகள் உள்ளன. வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை விரைவாக அவர்களது கிராமங்களில் குடியேற்றவேண்டியுள்ளது. அக்கிராமங்கள் அபிவிருத்திக்குள்ளாக்கப் படவேண்டியுள்ளது. வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

யுத்தத்துக்காக நாம் நிதியையும் காலத்தையும் செலவளித்தபோதும் நாட்டின் சகல பகுதிகளிலும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தவறவில்லை. பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. நுரைச்சோலை, மேல்கொத்மலை, அம்பாந்தோட்டை துறைமுகம் என நிறுத்தப்பட்ட பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply