யாழில் இதுவரையான கொரோனா பாதிப்பு விபரம்
யாழ் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நேற்று (25) வரையில் 213 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 3,686 குடும்பங்களை சேர்ந்த 10,548 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுவதாக தெரிவித்த அவர் நேற்று (25) மாலை என்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை பெறுபேறுகளின் படி 239 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
மொத்தமாக 10,725 நபர்களுக்கு இற்றைவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தைவிட தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு இறப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நேற்றைய கணக்கெடுப்பின் படி 213 நபர்கள் இறந்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்கள் இறுக்கமாக சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டிய தேவையுள்ளது. சுகாதார அமைச்சின் வழிகாட்டல் மற்றும் கொவிட் செயலணியின் வழிகாட்டலுக்கு அமைய பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன்மிக அவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும் என்றும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை சுகாதார நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், தேவையற்ற நடமாட்டம் , ஒன்றுகூடல்களை தவிர்க்க வேண்டும். எனவே இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எம்மையும், குடும்பத்தையும் , சமூகத்தையும் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த அவர் அதேவேளை எழுந்து நடமாட முடியாத வயோதிபர்களுக்கு வீடுவீடாக சென்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை சுகாதார தரப்பினர், கிராம சேவையாளர் மற்றும் இராணுவத்தினரும் கைகோர்த்து தடுப்பூசி நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்துள்ளார்கள். தடுப்பூசிகளை விரைந்து பெற்றுக் கொள்வது எமது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காகவேயாகும் என்று அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply