ஆயுதமேந்திய சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதே நோக்கமாகும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
ஆயுதமேந்திய 13,14வயது சிறுவர்களுக்கு எதிராக நாம் நீதிமன்றம் செல்லவோ வழக்கு தொடரவோ எதிர்பார்க்கவில்லை. அவர்களைத் தண்டிக்கும் அளவிற்கு நாம் குரூரமானவர்களல்ல. அவர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்துடன் சேர்ப்பதே தமது நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார. பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்திய ஜனாதிபதி மற்றும் முப்படையினருக்கு கௌரவமளிக்கும் விசேட நிகழ்வொன்று மஹியங்கனை ரஜ மஹா விஹாரையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தோடர்ந்து அவர் கூறுகையில்.
முப்பது வருட காலம் வடக்கு மக்களுக்குக் கிட்டாத அபிவிருத்தியை மீளப் பெற்றுக்கொடுப்பதுடன் அரசாங்கத்தின் 180நாள் துரித அபிவிருத்தித் திட்டம் மூலம் இடம் பெயர்ந்த 80வீத மக்களை மீளக்குடியமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். வடக்கில் தற்போது மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்களில் 40,000 பேர் சிறுவர்களாவர். அவர்கள் அனைவருக்கும் பாடசாலைக்குச் செல்லும் வாய்ப்பை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
எமது பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்கையில் அந்த சிறுவர்களிடம் துப்பாக்கிகளைக் கொடுத்து பயங்கரவாதிகள் யுத்தத்துக்கு அனுப்பினர். இதுபோன்ற கொடுமையான செயல்களை அவர்கள் செய்தனர். நாமே அச்சிறுவர்களை மீட்டுள்ளோம்.
உலகில் இடம்பெயர்ந்தோர் வாழும் முகாம் களை நோக்குகையில் எமது முகாம்களில் சிறந்த சூழ்நிலை நிலவுகிறது. அவர்களுக்கான சகல வசதிகளையும் பெற்றுக்கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்களை முகாம்களில் தடுத்து வைக்கும் நோக்கம் எமக்கில்லை. விரைவாக அவர்களை மீளக்குடியமர்த்துவதே எமது எதிர்பார்ப்பு. தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அவர்களை மீளக் குடிய மர்த்துவதே படையினரதும் அரசாங்கத்தினரதும் நோக்கமாகும்.
அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களைத் தற்போது நலன்புரி முகாம்களிலிருந்து விடுவித்துள்ளோம். மிதிவெடிகள் அகற்றப்பட்டு விரைவாக இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தியமையை தாய்நாட்டின் இரண்டாவது சுதந்திரம் என மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர். 1917ல் ஊவா வெல்லஸ்ஸவில் நமது முன்னோர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்தை நாம் மறக்கவில்லை. வரலாற்றை நாம் மறந்துவிடவும் கூடாது. ஊவா மாகாணத்தைப் பொறுத்தவரை நாட்டின் மிகவும் கஷ்டப்பிரதேசமாகவே கடந்த காலங்களில் காட்சியளித்தது.
நாம் நாட்டை ஐக்கியப்படுத்தும் அதேவேளை கஷ்டப் பிரதேசங்கள் என்ற பெயரையே நாட்டின் அகராதியிலிருந்து நீக்கிவிட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இதற்கு சகலரதும் அர்ப்பணிப்பு மிகவும் அவசியமாகும்.
பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் ஊவா வெல்ல ஸ்ஸ மக்களின் பங்களிப்பு கணிசமானது. வடக்கு, கிழக்கு யுத்தத்தில் ஊவாவிலிருந்து சென்ற 2700ற்கு மேற்பட்ட இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனையிறவு முகாமை மீட்பதற்காக அன்று டோசருக்கு மேல் பாய்ந்து தமது உயிரைத் தியாகம் செய்த காமினி கூட ஊவா வெல்ல ஸ்ஸவில் பிறந்தவரே.
இன்று சிலர் படையினரின் வெற்றியைக் கொண்டாடுவது பற்றி பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பி வருகின்றனர். நாம் நடத்துவது களியாட்டம் அல்ல. பயங்கரவாதத்தை வென்றெடுத்த படையினருக்கான கௌரவம் வழங்கும் நிகழ்வு இது. மஹியங்கனை பகுதி மக்கள் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலுக்குள்ளானவர்கள்.
இன்னும் மூன்று வருட காலம் பயங்கரவாதம் தொடர்ந்திருந்தால் மஹியங்கனை பிரதேசம் புலிகளின் அரசாட்சிக்கு உட்பட்டிருப்பது உறுதி. அப்படி நிகழ்ந்திருந்தால் இனத்தின் மரபுரிமை சிதைக் கப்பட்டிருக்கும். இந்தப் பிரதேசத்தில் பல பகுதிகள் எல்லைக் கிராமங்களாகவிருந்தன. இன்று எல்லைக்கிராமங்கள் இல்லாதொழிக்கப்பட்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது- மக்கள் அதற்காக மகிழ்ச்சி கொண்டாடுவது தவறல்ல எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரட்ன, டிலான் பெரேரா, சி. பி. ரத்நாயக்க உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ், மாகாண முதல்வர்கள், அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள், பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply