செப்டம்பர் 11 மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 அன்று அரசின் சார்பில் ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும்.
இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி, ‘பாரதி இளங்கவிஞர் விருது’ ஒரு மாணவர் மற்றும் மாணவிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியாரின் பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று புத்தகமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சுமார் 37 லட்சம் பேருக்கு ரூ.10 கோடி செலவில் வழங்கப்படும்.
பாரதியாரின் வாழ்க்கை மற்றும் அவரின் படைப்புகள் குறித்து ஆய்வு செய்த அறிஞர்களான மறைந்த பெ.தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர் நினைவாக அவர்களின் குடும்பத்திற்கும் மற்றும் மூத்த அறிஞர் சீனி. விசுவநாதன், பேராசிரியர் மணிகண்டன் ஆகியோருக்கும் தலா ரூ.3 லட்சம் ரூபாய், விருது, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்களை பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி ஒன்று செய்தித்துறை சார்பில் நடத்தப்படும்.
திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும். உத்தர பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பாரமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply