யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதிக்கான முதலாவது பஸ் சேவை இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்கான பஸ் சேவை ஏ9 வீதி வழியாக இன்று காலை 10.35 மணிக்கு ஆரம்பமானது. யாழ். துரையப்பா விளையாட்டரங்கின் எதிரில் இருந்து ஜனாதிபதியின் ஆலோசகரும், வடக்கின் வசந்தம் திட்டத்திற்குப் பொறுப்பாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, சமூக சேவைகள், சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஆகியோர் வைபவரீதியாக இதனை ஆரம்பித்து வைத்தனர்.
இந்த வைபவத்தில் வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர், புதிதாக ஆளுநராகப் பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் உட்படப் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த சேவைக்கென யாழ். இலங்கை போக்குவரத்துச் சபைக்குப் புதிதாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த 5 பஸ்களில் 4 இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், 210 பயணிகள் தமது பிரயாணத்தைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சிக்குச் செல்லும் இந்த பஸ் தொடரணியில் செல்லும் பயணிகளை அங்கிருந்து அனுராதபுரம் மக்கள் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் கொழும்புக்கு ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்னும் ஓரிரு தினங்களில் கொழும்பிலிருந்து தொலைக்காட்சி வசதியுடன் கூடிய சொகுசு பஸ் சேவை யாழ்ப்பாணத்திற்கு நேரடியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply