அமெரிக்காவில் ஹிலாரி கிளிண்டனின் பெண் உதவியாளரை முத்தமிட்ட எம்.பி.
அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன். இவர் 2001-09 கால கட்டத்தில் நாடாளுமன்ற செனட் சபை எம்.பி.யாக இருந்தார். அப்போது அவரது உதவியாளராக இருந்தவர், ஹுமா அபேதின் (வயது 45).
இந்தப் பெண், ஹிலாரி கிளிண்டன் எம்.பி.யாக இருந்த அந்த காலகட்டத்தில், வாஷிங்டனில் நடந்த ஒரு விருந்தில் கலந்து கொண்டு விட்டு, செனட் சபை எம்.பி. ஒருவருடன் வெளியே வந்திருக்கிறார். இருவரும் ஒன்றாக வந்திருக்கிறார்கள். அந்த எம்.பி.யின் வீடு வந்து விட்டது. அப்போது அவர், ஹுமாவை “வீட்டுக்குள் வந்து ஒரு காபி சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்” என்று அழைத்து இருக்கிறார். அவரும் அந்த அழைப்பை ஏற்று வீட்டுக்குள் அவருடன் சென்றிருக்கிறார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்த எம்.பி., ஹுமாவுக்கு முத்தம் கொடுத்து விட்டார்.
இது தொடர்பான நினைவை ஹுமா இப்போது பகிர்ந்து கொண்டுள்ளார். அவர், “நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நான் அவரைத் தள்ளி விட்டேன். நான் விரும்புவதெல்லாம் என் வாழ்வில் இருந்து அந்த கடைசி 10 வினாடிகள் அழிக்கப்பட வேண்டும்” என்று கூறி உள்ளார்.
“அந்த எம்.பி.யின் நடவடிக்கையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக உணர்கிறீர்களா?” என்று ஹுமாவிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “நான் அவருடன் ஒரு சங்கடமான சூழ்நிலையில் இருந்தேன். அதை எப்படி சமாளிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அந்த முழு அனுபவத்தையும் புதைத்துவிட்டேன். அந்த நேரத்தில் அவர் என்னை பாலியல் ரீதியில் தாக்கியதாக நான் உணர்ந்தேனா என்றால் அப்படி உணரவில்லை. அந்த சூழ்நிலையில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல உணர்ந்தேன். மேலும், அவர் மன்னிப்பு கேட்டு, நான் நன்றாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நிறைய நேரம் செலவிட்டார்” என பதில் அளித்தார்.
அதே நேரத்தில் ஹுமா தன்னை முத்தமிட்ட அந்த எம்.பி. யார், அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதையெல்லாம் பற்றி வாய் திறக்கவில்லை.
இந்த தகவல்கள் அனைத்தையும், அவர் தான் எழுதியுள்ள ‘ போத்/அண்ட்: ஏ லைப் இன் மெனி வேர்ல்ட்ஸ்’ என்ற புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த புத்தகம் அடுத்த வாரம் வெளியாகிறது. இந்த புத்தகத்தில் வெளியாகியுள்ள இத்தகவல்களை ‘தி கார்டியன்’ பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது. இது அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஹுமா, ஹிலாரிக்கு மிகவும் நெருக்கமாக விளங்கியவர், நம்பிக்கைக்கு உரியவர், “ஹுமா எனது இரண்டாவது மகள்” என்று ஒரு முறை ஹிலாரி கிளிண்டன் உருகி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply