ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக ரூ. 1076 கோடி நிவாரணம்: அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் முகாமிட்டு இருந்த நிலையில் தலிபான்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறியது. இதையடுத்து தலிபான்கள் நாடு முழுவதையும் கைப்பற்றிக் கொண்டனர். இவ்வளவு காலமும் பயங்கரவாதிகளாக செயல்பட்ட தலிபான்கள் இப்போது ஆட்சியை பிடித்து இருப்பதால் பயங்கரவாத செயல்களை கைவிடுவதாக கூறினார்கள்.

எனவே அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ரஷியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளன. அமெரிக்காவும் அதேபோல உதவ முன் வர வேண்டும் என்று தலிபான்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்காக மனிதாபமான அடிப்படையில் ரூ. 1076.85 கோடி உதவி செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நாங்கள் இந்த உதவியை அறிவித்து இருக்கிறோம். இந்த உதவியை நாங்கள் நேரடியாக சென்று கொடுக்கமாட்டோம்.

சர்வதேச சேவை அமைப்புகளிடம் இந்த பணம் ஒப்படைக்கப்படும். குறிப்பாக ஐ.நா. சபையின் அகதிகள் மறுவாழ்வு அமைப்பு, யுனிசெப், சர்வதேச குடிபெயர் மக்கள் நல அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றிடம் இந்த பணம் ஒப்படைக்கப்படும்.

தலிபான்களுக்கு நேரடியாக நாங்கள் எந்த உதவியும் செய்யவில்லை. அங்கு நிலவும் பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காகத்தான் இந்த உதவியை செய்கிறோம்.

ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 1 கோடியே 80 லட்சம் மக்களுக்கு இந்த உதவி சென்றடையும். ஏற்கனவே நாங்கள் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக இந்த ஆண்டில் ரூ.3,500 கோடி வரை நிதியை அதிகரித்துள்ளோம்.

மக்களின் உணவு தேவை, சுகாதார வசதிகள், பனிக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள், அவசர தேவைகள் போன்றவற்றிற்கும், கொரோனா தடுப்பு நடவடிக் கைகள், ஊட்டச்சத்து குறை பாடு ஆகியவற்றுக்கும் இது உதவியாக இருக்கும். ஆப்கானிஸ்தான் மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply