முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய தலிபான் தலைவர்
தலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவரான முல்லா உமரின் மரணத்துக்கு பிறகு 2016-ம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் உச்ச அதிகாரம் படைத்த தலைவராக இருந்து வருபவர் ஹைபத்துல்லா அகுந்த்சாதா. இவர் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராகவும் உள்ளார். ஆனால் இவர் ஒருபோதும் பொதுவெளியில் தோன்றியது கிடையாது. எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பது மர்மமாகவே இருந்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பிறகு கூட ஹைபத்துல்லா அகுந்த்சாதா வெளியில் தலைகாட்டவில்லை.
அதே வேளையில் தலிபான்கள் தலைமையில் அமையும் புதிய அரசியல், மதம் மற்றும் ராணுவ விவகாரங்கள் மீதான இறுதி முடிவை எடுக்கும் உச்ச அதிகாரம் படைத்த தலைவராக ஹைபத்துல்லா அகுந்த்சாதா இருப்பார் என தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது. முன்னதாக ஹைபத்துல்லா அகுந்த்சாதா அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக பலமுறை வதந்திகள் பரவின. அண்மையில் கூட தலிபான்களுக்குள் ஏற்பட்ட உள்மோதலில் அவர் பலியானதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இந்த வதந்திகளை பொய்யாக்கும் வகையில் முதல் முறையாக தலிபான் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாதா பொதுவெளியில் தோன்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. காந்தஹார் மாகாணத்தில் உள்ள ஒரு மதரசா பள்ளிக்கூடத்துக்கு சென்று, அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றியதாக தலிபான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹைபத்துல்லா அகுந்த்சாதா வருகையையொட்டி அந்த இடத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும், வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply