அமெரிக்காவில் ராப் இசைக்கலைஞர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் புகழ் பெற்றவர் ராப் இசைக்கலைஞர் யெங் டால்ப் (வயது 36). இவரது இயற்பெயர் அடால்ப் ராபர்ட் தார்ன்டன் ஜுனியர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட முதல் ஆல்பமே பெரும் புகழைத் தந்தது. இந்த ஆல்பத்தை யூ டியூப்பில் பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

இவர் நேற்று முன்தினம் மதியம் தனது சொந்த ஊரான டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ் நகர விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு கடையில் தின்பண்டம் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என தகவல்கள் கூறுகின்றன. அவருடைய மறைவுக்கு சக இசைக்கலைஞர்கள் மேகன் தீ ஸ்டாலியன், சான்ஸ் தி ராப்பர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

யெங் டால்ப் உடல்நலமில்லாமல் இருக்கிற தனது உறவினரை பார்ப்பதற்காக அந்த நகருக்கு கடந்த திங்கட்கிழமையன்று வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.யெங் டால்ப் சுட்டுக்கொல்லப்பட்டதை அந்த நகர மேயர் ஜிம் ஸ்ட்ரிக்லேண்ட் உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘ராப் கலைஞரான யெங் டால்ப் சுட்டுக்கொல்லப்பட்ட துயரம், வன்முறைக்குற்றம் ஆகும். இது மிகுந்த வலியை ஏற்படுத்தி உள்ளது’’ என குறிப்பிட்டார்.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவரை சார்லட் நகரில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவருடைய கார் சேதம் அடைந்தது. அதே ஆண்டின் செப்டம்பர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுட்டுக்கொல்ல நடந்த முயற்சியில் காயங்களுடன் தப்பினார்.யெங் டால்ப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது, அமெரிக்காவில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. பெருகி வரும் துப்பாக்கி வன்முறைக் கலாசாரம் மக்கள் மனங்களில் அச்சத்தையும், கவலையையும் ஒரு சேர விதைத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply