இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலியிலும் பரவியது ‘ஒமிக்ரான்’ வைரஸ்

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் தோன்றி உள்ளது.இந்த வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக அறியப்படுகிறது. இதனால் உலக நாடுகள் உஷாராக இருக்கின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் தோன்றி, பெல்ஜியம, இஸ்ரேல், ஹாங்காங்குக்கு பரவி விட்டது.

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் குறைவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவத்தொடங்கி இருப்பது புதிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வகையில் இந்த வைரஸ் பற்றி முதலில் விழிப்புணர்வு அடைந்த இங்கிலாந்திலும் கால் பதித்து விட்டது. அங்கு 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று, ஜெர்மனியிலும், இத்தாலியிலும் ஒமிக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது.

இங்கிலாந்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், லண்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய வைரசுக்கு 2 பேர் ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகி இருப்பதால், இலக்கு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். புதிய வைரஸ் பரவலை மெதுவாக்குவதற்கும், நமது பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் இது பொறுப்பான நடவடிக்கை ஆகும்.

இங்கிலாந்துக்கு வருகிற அனைவரும், இரண்டாவது நாளில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவு ‘நெகட்டிவ்’ என வருகிற வரையில், சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும், தடுப்பூசிகளை போட்டிருந்தாலும்கூட அதைப் பொருட்படுத்தாமல் தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடைகளுக்கு செல்கிறபோது, பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கிறபோது, முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். இன்று முதல் கொரோனா வைரஸ் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் இயக்கத்தை ஊக்கப்படுத்தப்போகிறோம் என்று அவர் கூறினார்.

இந்த வைரஸ் பற்றி அமெரிக்காவின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஆண்டனி பாசி கூறுகையில், “இந்த வைரசை நாங்கள் இன்னும் கண்டறியவில்லை. ஆனால் இந்த வைரஸ் ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கிறது என்றால் நான் ஆச்சரியப்படமாட்டேன்” என தெரிவித்தார்.

மேலும், “இந்த அளவுக்கு பரவும் தன்மையைக் கொண்டுள்ளதாக காட்டும் வைரஸ், உங்களிடம் இருந்தால் அது கிட்டத்தட்ட மாறாமல், இறுதியில் எல்லா இடங்களுக்கும் சென்று விடும்” எனவும் கருத்து தெரிவித்தார்.

ஒமிக்ரான் வைரசுக்கு ஏற்ற வகையில் தங்கள் தடுப்பூசியை மாற்றியமைத்து புதிய தடுப்பூசியை 100 நாளில் கண்டுபிடிக்க முடியும் என்று பைசர் மற்றும் பயோஎன்டெக் மருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதேபோன்று அஸ்ட்ரா ஜெனேகா, மாடர்னா, நோவாவேக்ஸ் நிறுவனங்களும் ஒமிக்ரான் வைரசுக்கு ஏற்ற விதத்தில் தங்கள் தடுப்பூசியை மாற்றியமைக்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply