தற்கொலையாளிகள் உட்பட சகல மட்ட புலிகளுக்கும் புனர்வாழ்வு
புலிகள் இயக்கத்திலிருந்த தற்கொலையாளிகள் உட்பட அனைத்துத் தராதரங்களையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வளிப்பதற்கு அரசாங்கம் விசேட செயல்திட்டமொன்றை அமுல்படுத்தியுள்ளது. புனர் வாழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்காக மேஜர் ஜெனரல் தயா ரட்னாயக்க புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக ஜனாதிபதியால் நிய மிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், இதுவரை காலம் ஜனாதிபதியின் பொறுப்பின் கீழிருந்த புனர்வாழ்வு திணைக்களம், அடுத்த வாரத்திலிருந்து நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக புதிய ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்னாயக்க (இராணுவ முன்னாள் ஊடகப் பேச்சாளர்) நேற்று தகவல், ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுடன் செய்தியாளர் மாநாட்டில் மேஜர் ஜெனரல் கலந்துகொண்டு மேலும் தகவல் தருகையில், “இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், கைதுசெய்யப்பட்டவர்கள் எனப் பத்தாயிரம் புலி உறுப்பினர்கள் தற்போது 12 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தொகை 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அதிகரிக்கவும் வாய்ப்புண்டு. இவர்கள் அனைவரையும் புனர்வாழ்வளித்து முகாமுக்கு வெளியில் கொண்டுவருவதுடன், நாட்டின் உற்பத்தித் துறையில் ஈடுபடுத்தி, சமூகத்துக்குள் உள்வாங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கிழக்கு மாகாணத்தில் சுமார் ஆயிரம் புலி உறுப்பினர்களுக்கும், சிறுவர் போராளிகளுக்கும் புனர்வாழ்வு அளிக்கும் முகமாக அப்போது ஜனாதிபதியின் பொறுப்பின் கீழ் புனர்வாழ்வு திணைக்களம் செயற்படுத்தப்பட்டது. தற்போதும் 837 பேர் கிழக்கில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால், புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்களின் தொகை அதிகரித்துள்ளது.
அதனால், தனியான திணைக்களத்தை உருவாக்கி என்னை ஆணையாளர் நாயகமாக ஜனாதிபதி நியமித்துள்ளார்” என்று தெரிவித்த அவர், “புலிகள் இயக்கத்தினரின் செயற்பாட்டில் பங்குபற்றிய உறுப்பினர்களைத் தரம்பிரித்து, அதற்கேற்ற வகையில் புனர்வாழ்வு அளிக்கப்படும். இயக்கத்திற்காக சுவரொட்டி ஒட்டியவர்கள் முதல் தற்கொலையாளிகள் வரை இனங்கண்டு அனைவருக்கும் புனர்வாழ்வளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்” என்று தெரிவித்த துடன், இது தொடர்பில் வர்த்த மானி அறிவித்தலில் விபரமாகக் குறிப்பிடப்படும் என்றும் கூறினார்.
“முதலில் புலிகள் இயக்கத்தின் தொடர்பு பற்றி ஆராய்ந்து வருகின்றோம். அவர்களின் கல்வி நிலை, வயது, தொழில் விருப்பு வெறுப்புகள் என்பவற்றை அறிந்து அதற்கேற்ப புனர்வாழ்வளிப்போம்” என்றும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply