நாளை முதல் கிழக்கு மாகாணத்தில் தனிநபர்கள் ஆயுதம் வைத்திருக்கத் தடை: எடிசன் குணத்திலக்க
“மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை முதலாம் திகதி முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.” என கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணத்திலக்க தெரிவித்தார்.நேற்று மாலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றில் உரையாற்றிய போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டி.பி.,புளொட்,ஈ.பி.ஆர்.எல்.எப்.(பத்மநாபா அணி) ரி.எம்.வி.பி. ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வர்த்தகர்கள் தொடர்ந்து கப்பம் கொடுப்பதையும், மதுபான முகவர்களும், வியாபாரிகளும் தமது கமிஷன்களை கொடுப்பதற்காக அதிக விலைக்கு மதுபான வகைகளை விற்பனை செய்வதையும் நிறுத்திக் கொள்ளவேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும்”என்றும் குறிப்பிட்டார்.
“மட்டக்களப்பு நகர பிரதேசத்திலும் அண்மித்த பிரதேசங்களிலும் அண்மைக் காலங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய குழுவை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் ஒரு வார காலத்திற்குள் கைது செய்து மக்கள் முன் நிறுத்தவார்கள். இக் கொள்ளையர்கள் கொழும்பிலிருந்து வரவில்லை. இந்தப் பிரதேசத்தில் தான் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தேவையேற்படும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கான அதிகாரமும் பொலிஸாருக்குத் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
மதுபான விற்பனையாளர்களும், முகவர்களும் தாங்கள் விரும்பிய விலைக்கு இனிமேல் விற்க முடியாது மதுபான போத்தல்களில் குறிப்பிட்டுள்ள விலைக்கே விற்க வேண்டும். இதனை மீறி நடந்தால் மதுபான லைசன்ஸ் ரத்து செய்யப்படும்” என்று மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும், இராணுவ மற்றும் விசேட அதிரடிப் படை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply