வவுனியா மக்கள் மகிழ்ச்சி: அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பு
மதவாச்சி வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இரு ரயில் சேவைகளை வவுனியா வரை நீடித்திருப்பது குறித்து வவுனியா மக்கள் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தனர்.வவுனியா நகர சபை தேர்தல் தொடர்பாக நேரில் அவதானிப் பதற்காக கொழும்பில் இருந்து சுமார் 40 ஊடகவியலாளர்கள் நேற்று முன்தினம் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த பொதுமக்கள், கொழும்பில் இருந்து வரும் தங்களுக்கு மதவாச்சியில் இறங்க நேரிடுவதாகவும் மதவாச்சியில் இருந்து வவுனியா வருவதற்கு 400 முதல் 500 ரூபா வரை ஆட்டோவிற்கு செலவிட நேருவதாகவும் குறிப்பிட்டனர்.
தற்பொழுது தடையின்றி நேரடியாக வவுனியாவுக்கு வரக்கூடியதாக உள்ளதாகவும் பொதுமக்கள் குறிப்பிட்டனர்.இவ்வளவு காலமும் இரவு 7.00 மணி வரையே பஸ் சேவை காணப்பட்டதாகவும் ஆனால் இரவு 10.00 மணிவரை இ.போ.ச. பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பது குறித்தும் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பல வருடங்களின் பின்னர் மீண்டும் தேர்தல் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது குறித்தும் பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சி வெளியிட்டனர். தேர்தல் நடத்துவதற்கு அமை தியான சூழல் காணப்படுவ தாகவும் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். நகரில் காணப்படும் சோதனைச் சாவடிகள், வீதித் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்பதே பலரதும் கருத்தாக இருந்தது. மதவாச்சி சோதனைச் சாவடி நீக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
நகரமெங்கும் பல்வேறு கட்சிகளினதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததோடு பிரசார பணிகளும் சூடுபிடித்துள்ளது. இங்கு நடைபெற்ற ஊடக வியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப் பெரும யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில் எதுவித வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறவில்லை என கண்காணிப்புக் குழுக்களும் பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஐ.ம.சு.முன்னணி போட்டியிடுகிறது. வவுனியா நகரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இந்த மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கவும் சமஉரிமை அளிப்பதுமே அரசின் நோக்கம். இந்த மக்களுக்கு தடையாக உள்ள சகல தடங்களும் கட்டம் கட்டமாக நீக்கப்படும் என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,
தென்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் அதே உரிமைகள் வடபகுதி மக்களுக்கு வழங்கவும் இந்த பகுதியில் பாரிய அபிவிருத்திகளை ஏற்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆளும் கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்வதன் மூலமே இப்பகுதியில் முழுமையாக அபிவிருத்திகளை செய்ய முடியும். எனவே வவுனியா மக்கள் புத்திசாலித் தனமாக முடிவு செய்வர் என நம்புகிறோம். சகல இன மக்களும் ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த ஒன்றுபட வேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply