கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது
வடக்கே உள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே வன்னிப்பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதல்களின்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரச நிர்வாகக் கட்டமைப்புக்கள் நிலைகுலைந்ததையடுத்து அந்த மாவட்டங்களின் சிவில் நிர்வாக அதிகாரிகள் வவுனியாவில் தமது இணைப்பு அலுவலகங்களில் இருந்து பணியாற்றினார்கள்.
யுத்தத்தின் உச்சகட்டத்தின்போது மக்கள் வன்னிப்பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்ததையடுத்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் வவுனியாவில் இருந்து முழுமையாகச் செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புலனாய்வு பிரிவினர் இவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது இவர் தமது விடுதியில் தனிமையில் இருந்ததாகவும் இவரது பொறுப்பில் இருந்த இவரது உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் அரச அலுவலகம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்பன இவரது அலுவலகத்தில் அதிகாரிகளினால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருககின்றது.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இவரை அதிகாரிகள் கொழும்புக்கு மேல் விசாரணைக்காகக் கொண்டு சென்றிருப்பதாகவும் தவகல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இவர் ஏன் கைது செய்யபட்டிருக்கின்றார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தின் தலைமை சிவில் நிர்வாக அதிகாரியாகிய நாகலிங்கம் வேதநாயகன் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அந்த மாவட்டத்தின் சிவில் நிர்வாக கடமைகளும் அலுவலகங்களும் வழமைபோல செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஏனைய சிவில்அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இது தொடர்பாக இலங்கை ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர கூறும்போது, விசாரணை நடைபெற்று வருவதால் தற்போது எவ்வித கருத்துக்களையும் கூற முடியாது என தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply