தவறுகள் இடம்பெறும் வாக்குச் சாவடிகளின் வாக்குகள் கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்படும்

ஏதாவதொரு வாக்குச் சாவடியில் மோசடிகள்,குளறுபடிகள் இடம்பெற்றது நிரூபிக்கப்படுமாயின் அவ்வாக்குச் சாவடி வாக்குகள் கணக்கெடுக்கப்படுவதிலிருந்து நீக்கப்படுவதுடன் தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப் படுவதும் நிறுத்தப்படும் என்று தேர்தல் செயலகம் நேற்றுத் தெரிவித்தது.இவ்வாறு இரத்து செய்யப்படும் வாக்குச் சாவடிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு அதன் பின்னரே இறுதி முடிவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டிருக்கிறது.

இதேநேரம் வாக்குச் சாவடிகளினுள் இருந்தபடி தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடவென பெப்ரல் இயக்கத்திற்கும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற் கான மத்திய நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்பட் டிருப்பதாகவும் தேர்தல் செயலக உயரதிகாரியொருவர் கூறினார்.அவ்வதிகாரி மேலும் கூறுகையில் ஊவா மாகாண சபைக்கும், யாழ்ப்பாண மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளன. தேர்தல் பிரசாரபணிகள் யாவும் நேற்று நள்ளிரவுடன் நிறைவு பெற்றுள்ளன.

திட்டமிட்டபடி நாளை மறுதினம் 8 ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும். வன்முறைகளின்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடு களும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப் படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் சட்ட ஏற்பாடுகளை மீறு வோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 814 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேரும், யாழ். மாநகர சபைக்கென ஒரு இலட்சத்து 417 பேரும், வவுனியா நகர சபைக்கென 24 ஆயிரத்து 621 பேரும் வாக்களிக்கவுள்ளனர். இவர்கள் வாக்களிக்கவென பதுளை மாவட்டத்தில் 507 வாக்கு சாவ டிகளும், மொனராகலை மாவட்டத்தில் 307 வாக்குச் சாவடிகளும், யாழ்ப்பாணத்தில் 70 வாக்குச் சாவடிகளும், வவுனியாவில் 18 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட விருக்கின்றன.

இதேவேளை இடம்பெயர்ந்துள்ளவர்கள் வாக்களிக்கவென புத்தளத்தில் 6 வாக்குச் சாவடிளும், அனுராதபுரத்தில் 4 வாக்குச் சாவடிகளும், கொழும்பில் இரு வாக்குச் சாவ டிகளும், கம்பஹாவில் இரு வாக்குச் சாவடிகளும் களுத்துறையில் ஒரு வாக்குச் சாவடியும் மற்றும் விசேட வாக்குச் சாவடிகளும் அமைக்கப்படவிருக்கின்றன என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply