ஊவாவில் மட்டுமல்ல வடக்கிலும் ‘ஐ.ம.சு.மு. வெற்றிபெறுவது உறுதி

ஊவா மாகாணத்தில் மட்டுமன்றி வடக்கிலும் 33 வருடங்களுக்குப் பின்னர் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறுவது உறுதியென அக்கட்சியின் செயலாளரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று முன்தினம் முடிவடைவதையொட்டி நேற்று முன்தினம் பிற்பகல் பதுளை நகரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதிப் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்ட இம் மக்கள் பேரணிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இவ்வாறு தெரிவித்தார். பெருமளவிலான அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது :- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பதுளையில் ஊவா பல்கலைக்கழகத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.

அண்மைக் காலமாக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு 3719 ஆசிரியர் நியமனங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளதுடன் 600 ஆசியர்கள் பதுளை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
ஊவா மாகாணத்தில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமானோர் விவசாயத்தை ஜீவனோபாயமாகக் கொண்டவர்கள். இவர்களுக்கு அரசாங்கம் பசளை உட்பட சகல தேவைகளையும் வழங்கி வருகிறது. மக்களின் தேவையை சரிவர புரிந்துகொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.

இந்நிலையில் பதுளையில் இடம்பெறும் தேர்தல் கூட்டங்களில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஊவா மாகாணத்திற்கு ஒரு விமான நிலையத்தை உருவாக்குவது பற்றி பேசிவருகிறார். எந்த மக்களுக்கு எவை தேவை என்பதை உணர்ந்து செயற்படுவது அரசாங்கம் மட்டுமே என்பது மக்களுக்குப் புரியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன :-

இன்றுடன் மாகாண சபைத் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து 48 மணித்தியாலங்களில் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை ஆரம்பமாகும்.
மாகாண மட்ட தேர்தல் வெற்றி அம்மாகாணத்திற்கு மட்டுமே உரித்துடையதல்ல. அது முழு நாட்டினதும் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

மாகாண சபைத் தேர்தலை நாம் கிழக்கில் ஆரம்பித்து அங்கு பெரு வெற்றிபெற்று தொடர்ந்து நடத்திய தேர்தல்களிலும் அமோக வெற்றிபெற்றோம். கிழக்கு மக்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை தோற்கடித்திருந்தால் நாம் பயங்கரவாதத்தை ஒழித்திருக்க முடியுமா? ஐக்கிய தேசியக் கட்சி அங்கு வெற்றி பெற்றிருந்தால் அங்குள்ள நிலையென்ன? இதேபோன்று ஊவா மாகாண தேர்தலும் முழு அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதனால் இம் மாகாணத்தில் தேர்தல் வெற்றி மாகாண பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல. நாட்டின் சகல அரசியலிலும் பங்களிப்புச் செய்கிறது.

ஊவாவில் வாழும் 99.9 விவசாய மக்களுக்குப் பிரச்சினைகள் உள்ளன. தண்ணீர்ப் பிரச்சினை உள்ளது. நீர்ப்பாசனப் பிரச்சினை உள்ளது. இது இந்த மக்களின் பொருளாதாரத்தை மட்டுமன்றி தேசிய பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காத்திரமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் திட்டம் எம்மிடமுண்டு. எமது அரசாங்கத்துக்கு சிறப்பான விவசாயக் கொள்கை உள்ளது. ஐ. தே. க. காலத்தில் அதன் முன்னோடித் தலைவர்களான டி. எஸ். சேனநாயக்க, டட்லி சேனநாயக்க போன்றோர் சிறந்த கொள்கை வகுத்துச் செயற்பட்டனர். எனினும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விவசாயத்தில் அக்கறையில்லை. உரமானியத்தை இல்லாதொழித்த பெருமையும் அவரது தலைமைத்துவத்துக்கே உண்டு.

ஜனாதிபதி தலைமையிலான இன்றைய அரசாங்கம் விவசாய மக்களின் எதிர்காலத்திற்குப் பொறுப்பு வகிக்கக் கூடியது. அதனால் ஜனாதிபதியின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் 8ம் திகதி அனைவரும் வெற் றிலைக்கு வாக்களித்து அரசாங்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply