கூட்டமைப்புடன் பேசுமாறு ஜனாதிபதிக்கு இந்தியா அழுத்தம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனாவது பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுத்துள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தீர்வுகாண முடியாது என இந்தியப் பிரதமர், இலங்கை ஜனாதிபதியிடம் கூறியதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே, தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டாலும், குறைந்தபட்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனாவது பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடொன்றுக்கு வருமாறு மன்மோகன் சிங் வலியுறுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன், தான் பேச்சுவார்த்தை நடத்தியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் வி.தங்கபாலு அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினையைத் தீர்க்கவேண்டுமென இலங்கை அரசாங்கம் உண்மையாக விரும்புகிறதாயின், சமாதான முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்படவேண்டுமெனக் கூறியுள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு யோசனைத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்குமாயின் அது 13வது திருத்தச்சட்டமூலத்துக்கும் அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும் என தங்கபாலு அந்த ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இதுஇவ்விதமிருக்க, அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply