எதிர்பார்த்ததைவிட பெருவெற்றி: அமைச்சர் சுசில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு நாட்டு மக்கள் மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
ஊவா மாகாண சபை மற்றும் யாழ். வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்திருப்பது இந்த தேர்தல் முடிவுகள் மூலம் புலனாகிறது. ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் யாழ். மாநகர சபைத் தேர்தலிலும் ஐ.ம.சு. முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது.
நாம் எதிர்பார்த்ததை விட பெருவெற்றி எமக்கு கிடைத்துள்ளது. ஊவா மாகாணத்தில் சுமார் 77 வீத வாக்குகள் ஐ.ம.சு. முன்னணிக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களில் கிடைத்திராத வரலாறு காணாத பெறுபேறு இம்முறை தேர்தலில் கிடைத்திருக்கிறது.
அல்பிரட் துரையப்பாவின் பின்னர் முதன்முறையாக சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐ.ம.சு. முன்னணி யாழ். மாநகர சபைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளது. யாழ். மாநகர சபைத் தேர்தலில் சுமார் ஒரு இலட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் அதனை விட பாதியளவு மக்களே இங்கு வசிக்கின்றனர். வவுனியா நகரம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்த பகுதியாகும். இன்று அங்கு ஜனநாயக ரீதியான தேர்தல் நடைபெற்று தமிழரசுக் கட்சி வெற்றியீட்டியுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply