முக்கிய பல தகவல்கள் கே.பியிடமிருந்து அம்பலம்: கெஹலிய ரம்புக்வெல்ல

புலிகள் இயக்கத்தை தொடர்ந்து வலுப்படுத்தும் பொருட்டு பெரும் தொகையான உதவிகளையும் ஆதரவையும் வழங்கிய உள்நாட்டு, வெளிநாட்டு நபர்களைக் பற்றியும் அமைப்புக்கள் பற்றியும் இப்பொழுது கைதாகி உள்ள கே.பியிடமிருந்து பல தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சரும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஊடகப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கண்டி பொல்கொல்லை கூட்டுறவு பயிற்சிப் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். பிரதேச செயலகப் பிரிவுடன் இணைக்கப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள குடும்பங்களின் நலன்கள் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக தெளிவுறுத்தும் செயலமர்வில் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசும்பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

புலிகள் அமைப்பு கடந்த காலத்தில் மேற்கொண்ட ஆயுதக் கொள்வனவு, போதைப் பொருள் கடத்தல், நிதி மோசடி போன்றவை தொடர்பான பல தகவல்கள் இப்பொழுது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவர் எனக் கருதப்படும் கே. பி. என்ற குமரன் பத்மநாதன் இப்பொழுது தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இந்த அமைப்புக்கு உதவி ஒத்தாசை புரிந்த உள்ளூர், வெளியூர் பிரமுகர்கள், அமைப்புக்கள் என்பன பற்றி தகவல்கள் கிட்டியுள்ளன. பல அரச சார்பற்ற நிறுவனங்களும் இவற்றில் அடங்குகின்றன. விசாரிக்கப்பட்டு வருகின்ற கே. பி இந்தியாவிடம் இப்பேதைக்கு ஒப்படைக்கப்படமாட்டார். பதிலாக அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து அரசிடம் விசாரணைகளை மேற்கொள்ளலாம். சர்வதேச புரிந்துணர்வு அடிப்படையின் கீழ் இது அமையும்.

பல தசாப்தங்களாக பதுங்கியிருந்த பிரபாகரனை மகாவீரன் என பூதாகரமாகக் காட்டி உலகை ஏமாற்றிய பலர் உள்ளனர். இதே நிலைக்கு கே. பி. யையும் கொண்டுவர பலர் முயற்சித்த விபரங்களையும் நாம் அறிவோம். பிரபாகரன் மரணித்த பின்னர் அதன் தலைமைப் பீடத்தை ஏற்றுக்கொள்ள இருப்பவரென கே. பி.யை உள்ளூரிலும் சர்வதேச மட்டத்திலும் பிரபல்யப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் யாவும் பொய்த்துவிட்டன என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது.

இவ்வாறு புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் களையும் பூதாகரமாகக் காட்டியதை எமது புலனாய்வு த்துறையைச் சேர்ந்தவர்கள் நிர்மூலமாக்கிவிட்டனர். உலகுக்கு அதன் உண்மையை வெளிக்காட்டியதன் மூலம் சர்வதேச மட்டத்தில் இலங்கை முக்கிய இடத் தைப் பெறுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply