இனம், மதம் என்ற வகையில் மட்டுமல்ல எத்தகைய பிளவுக்கும் இனிமேல் இடமில்லை: ஜனாதிபதி

பிளவுக்கோ, துண்டாடுவதற்கோ இனி இந்த நாட்டில் இடமில்லை. இனம், மதம் என்ற வகையில் மட்டுமல்ல வேறு எத்தகைய பிளவுக்கும் இந்நாட்டு மக்கள் அங்கீகாரம் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதனால் முழு உலகிற்கும் எம்மால் முன்னுதாரணமாகத் திகழ முடிந்துள்ளது என குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று உலகம் சமாதானத்திற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள நவீன முன்னோடியாக எமது நாடு உள்ளதெனவும் தெரிவித்தார்.

நாம் இந்த நாட்டை புதிய யுகமொன்றை நோக்கி இட்டுச் செல்கிறோம். இனம், மதம் உட்பட சகல பேதங்களுக்கும் அப்பால் இன்று நாடு ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. முழுநாடும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பு மறைமாவட்டப் புதிய பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை கெளரவிக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் பண்டு பண்டாரநாயக்க, ஜீ. எல். பீரிஸ், ரோஹித போகொல்லாகம, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட அமைச்சர்கள், மதத்தலைவர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:-

மூன்று தசாப்தங்கள் இந்த நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழ்ந்த யுத்த சூழல் இருந்தது. இன்றைய புதிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அப்போதெல்லாம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் எம்மோடு ஒத்துழைத்தார். அது எமக்கு பாரிய பலமாக அமைந்தது.

அதேபோன்று மத சுதந்திரத்தை நாட்டில் ஏற்படுத்த நாம் மேற்கொண்ட அர்ப்பணிப்புள்ள செயற்பாடுகளிலும் அவர் தெளிவுடன் எமக்குப் பலம் சேர்த்தார்.

அன்று மடுத்திருப்பதிக்குச் செல்வதற்காக பயங்கரவாதிகளுக்கு கப்பம் கொடுக்க வேண்டியிருந்தது. மனிதாபிமான நடவடிக்கை மூலம் எமது படையினர் மடுத்தேவாலயத்தைப் பாதுகாக்க முற்பட்டபோது அங்கு பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகளே இருந்துள்ளன. “வாள் எடுத்தவன் வாளால் மடிவான்” என பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. அது போன்ற சமாதான நோக்கத்தைப் போற்றுகின்ற சமயத் தலத்தில் பதுங்கு குழிகளை வைத்திருப்பதென்பது அந்த மதத்திற்கே ஏற்படுத்தும் பாரிய களங்கமாகும்.

எனினும், மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்ட எமது படையினர் அவ்வாலயத்தின் ஒரு கூரை ஓட்டையாவது சேதப்படுத்தாமலேயே அதனை மீட்டெடுத்தனர். மடுத்தேவாலயம் மட்டுமின்றி எந்தவொரு சமய வழிபாட்டுத் தலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே படையினர் அவற்றை மீட்டெடுத்தனர். இதன் மூலம் மதங்களின் மீதுள்ள எமது கெளரவத்தை நாம் வெளிக்காட்டியுள்ளோம்.

இன்று கத்தோலிக்க மக்களுக்கு மடுத்திருப்பதிக்குச் செல்ல சுதந்திரம் கிடைத்துள்ளது. சுதந்திரம் மட்டுமன்றி கெளரவத்துடன் விசுவாசிகள் அங்கு பயணிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மடுமாதாவின் ஆசீர்வாதத்தை கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமன்றி முழு தாய்நாட்டிற்கும் பெற்றுக்கொடுத்துள்ளமை மகிழ்ச்சி தருகிறது. இதனால் எதிர்கொள்ளும் தந்தார் பண்டிகை மிகவும் விசேடமானதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

புதிய பேராயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி: பேராயரவர்கள் கடந்த காலங்களில் பல்வேறு பதவிகளை வகித்தவர். புதிய யுகமொன்றில் தடம்பதித்துள்ள தாய்த்திரு நாட்டின் இன்றைய சூழலில் பேராயராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்குப் பெரும் உறுதுணையாகிறது.

எமது நாட்டிற்குப் பெரும் கீர்த்தியைப் பெற்றுத்தந்துள்ள ஆயர்களில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிடத்தக்கவர். குறிப்பாக எமது நாட்டை வெளிநாடுகளில் பெருமைப்படுத்த அவர் மேற்கொண்ட பணிகள் பாராட்டுக்குரியவை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் பேராயர் பேரருட்திரு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகையின் சேவையைப் பாராட்டி கெளரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய இந்நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி உட்பட பெருமளவிலான குருக்கள் கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply