‘டயலொக்’ கைபேசி சேவைகள் வன்னி பிரதேசத்திற்கு விஸ்தரிப்பு

இலங்கையின் முன்னணி கையடக்கத் தொலைத் தொடர்பு சேவைகள் வழங்கும் நிறுவனமான டயலொக் டெலிகொம் நிறுவனம் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட வன்னிப் பிரதேசத்துக்கு தன் சேவையை நேற்று முதல் விஸ்தரித்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருக்கோவில், மடு, மாங்குளம், பூநகரி, ஆனையிறவு ஆகிய இடங்களுக்கு டயலொக் சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

டயலொக் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான்ஸ் விஜயசூரிய நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இத்தகவலை வெளியிட்டார். யுத்தம் நிறைவுபெற்று மூன்று மாத காலத்துக்குள் இச்சேவையை வழங்க முடிந்துள்ளதென்று குறிப்பிட்ட அவர், அப்பகுதிகளில் பணியாற்றி வரும் படை வீரர்கள் மற்றும் புனர்நிர்மாண, புனர்வாழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் தொலைத்தொடர்பாடல் தேவையை இச் சேவை விஸ்தரிப்பு நிறைவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டதோடு அங்கு வாழும் மக்களுக்கும் வெளி உலகோடு தொடர்புகொள்ள இது உதவும் என்று சொன்னார்.

நாட்டின் ஏனைய பகுதிகளை வன்னிப் பெருநிலத்தோடு இணைப்பதற்கு இராணுவத்தின் சமிக்ஞை பிரிவின் உதவியை டயலொக் பெற்றுள்ளது. இப்பகுதிகளில் சமிக்ஞை கோபுரங்கள் நிர்மாணிக்கும் பணிகள் பூர்த்தியாகும் வரை இராணுவத்தின் ஒத்துழைப்பு பெறப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

கொக்காவில் பகுதியில் 172 மீட்டர் உயரமான தொலைத் தொடர்பாடல் கோபுரமும் கிளிநொச்சியில் 120 மீட்டர் உயரமான கோபுரமும் 120 தினங்களில் அமைத்து முடிக்கும் பணிகள் எதிர்வரும் 19ம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக இங்கு உரையாற்றிய தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த காரியப்பெரும் தகவல் தெரிவித்தார்.

இவ்விரு கோபுரங்களும் வானொலி, தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சமிக்ஞைகளை அஞ்சல் செய்யும் வகையில் அமைக்கப்படவுள்ளன.

இதே சமயம் வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கு டயலொக் தனது சேவைகளை விஸ்தரிக்கும் பொருட்டு 60 சமிக்ஞை கோபுரங்களை நிர்மாணிப்பதற்கு டயலொக் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு கோடி அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டயலொக் நிறுவனத்தின் சேவை தற்போது நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான்ஸ் விஜயசூரிய, தற்போது விஸ்தரிக்கப்பட்டிருக்கும் சேவை வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும் நாட்டில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஒரு நடவடிக்கையாகவே கருதுவதாகவும் தெரிவித்தார். இராணுவ சமிக்ஞை பிரிவின் தலைவரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply