அரசசார்பற்ற நிறுவனங்களின் கணக்குகளைக் கோரினார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் செயற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் கணக்கறிக்கைகள் குறித்த விபரங்களை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். 

உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மில்லியன் ரூபா நிதியுதவிகள் மற்றும் நிதியுதவிகளை வழங்கியவர்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படவிருப்பதுடன், மோசடிகள் ஏதும் மேற்கொள்ளப்பட்டிருந்தால் கண்டறியப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் முகவர் ஸ்தாபனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்கள் மீதும் விசாரணைகளை நடத்துமாறு பணிப்புரை வழங்கியிருக்கும் கோதபாய ராஜபக்ஷ, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் நாட்டுக்குள் வரும்போது கொண்டுவந்த சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் குறித்தும் விசாரிக்குமாறு கூறியுள்ளார்.

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ஏ௯ வீதியில் மேற்குப் பகுதியில் சிறியளவு அபிவிருத்திப் பணிகளே உள்ளூர் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதை இராணுவத்தினர் கண்டறிந்துள்ளனர் என கோதபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களால் வன்னிக்கு எடுத்துச்செல்லப்பட்ட அனைத்துப் பொருள்களும் விடுதலைப் புலிகளுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக நேர்வேஜியன் மக்கள் அமைப்பின் பொருள்கள் விடுதலைப் புலிகளின் தேவைகளுக்கே பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி உண்மையாக மக்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? ஆனால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அவ்வாறு அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply