வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் பயங்கரவாதிகளின் தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை:ஜனாதிபதி

இந்நாட்டில் சட்டம், ஒழுங்குக்கு அப்பால் செயற்பட எவருக்கும் இடமளிக்க முடியாது. அவ்வாறு செயற்படுபவர்களைப் பாதுகாக்கவும் நாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.தோற்கடிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகள் மீண்டும் அணி சேர்கின்றார்களா என்பதை மிகுந்த அவதானத்துடன் நோக்கி வருகின்றோம். இதேவேளை வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் பயங்கரவாதிகளின் தலைவர்களைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அதனால் இலங்கையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடியவர்கள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை முறியடிக்க நாம் தயாராக உள்ளோம் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், பாதுகாப்புச் செயலாளரையும், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை சப்ரகமுவ மாகாண சர்வமதத் தலைவர்களும், மாகாண மக்களும் இணைந்து பாராட்டு சாசன பத்திரம் மற்றும் பேரானந்தி விருது வழங்கி கெளரவித்த வைபவம் இரத்தினபுரி சமன் தேவாலய வளாகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கும் யுத்தத்தில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் இளைஞர், யுவதிகள் தம்முயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். பலர் ஊனமுற்றிருக்கிறார்கள்.

மாவிலாற்றை விடுவிக்கும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 16 ஆம் திகதியுடன் 3 வருடங்கள் நிறைவுற்றன. மூன்று வருட காலப் பகுதியில் பயங்கரவாதிகளையும் அவர்களது தலைவர்களையும் தோற்கடித்துள்ளோம். இப்பணி நிறைவுற்று மூன்று மாதங்களாகின்றன. இவ்வாறு குறுகிய காலப்பகுதியில் இப்பாரிய பணியை எம்மால் செய்யமுடியும் என்பதை உலகில் எவரும் நம்பவில்லை.

மனிதாபிமான இராணுவ நடவடிக்கையைக் கண்டு பயங்கரவாதிகள் ஆச்சரியமடைந்தார்கள். நாம் அவர்களை மட்டுமல்லாமல் முழு உலகையுமே ஆச்சரியப்படச் செய்தோம். அதனால் உலகம் இன்று எம்மை வலுவான புதுமை மிக்க நாட்டினராகப் பார்க்கின்றனர். அப்படியிருந்தும் நாம் இந்த வெற்றியைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்ததோடு எம்பணியை நிறுத்திக் கொள்ளவில்லை.

பயங்கரவாதத் தலைவர்களையும், அவர்களது தற்கொலையாளர்களையும் ஒழித்துக் கட்டிவிட்டோம் என்பதற்காக தேசிய பாதுகாப்பு பூரணத்துவம் அடையாது. அதன் காரணத்தினால் இதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதேநேரம் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை அற்ப அரசியல் லாபம் பெறும் நோக்கில் முன்னெடு த்திருந்தால் இப்பாரிய வெற்றியை எம்மால் பெற்றிருக்கவே முடியாது.

மாறாக நாம் பாரிய நோக்கத்தை முன்நிறுத்தியே இந்நடவடிக்கையை முன்னெடுத்தோம். அதுவே தேசிய பாதுகாப்பு ஆகும். நாம் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றதுடன் மக்கள் பாரிய சந்தோஷத்திற்கு உள்ளாகினர். இருந்தும் நாம் நாட்டின் பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றில் செலுத்தி வருகின்ற கவனத்தில் சிறிதளவேனும் குறைவை ஏற்படுத்தவில்லை.

உலக வல்லரசுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நாம் நாட்டை விடுவித்திருக்கிறோம். அது எமக்கு மிகவும் பெறுமதியானது.

நாம் பொருளாதார ரீதியாக வலுவான தேசமாக மாறவேண்டும். நாட்டை விடுவிக்கவென மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்த நாம் இப்போது நாட்டை கட்டியெழுப்புவதற்கான மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றோம்.

எவரிடமும் கையேந்தாமல் வாழக் கூடிய நாட்டைத் துரிதகதியில் கட்டியெழுப்புவது அவசியம். பயங்கரவாதத்தை ஒழித்து கட்டியது போல் நாட்டையும், கட்டியெழுப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இதனை சகல அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ளவேண்டும்.

அதேநேரம் எம்மிடம் ஒழுக்கம் இருக்க வேண்டும். எம்மிடம் காணப்படுகின்ற ஒழுக்கம் காரணமாக உலக நாடுகளின் கெளரவத்தைக் கடந்த காலங்களில் எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

என்றாலும் இந்த ஒழுக்க நிலை தொடர்ந்தும் காணப்பட வேண்டும். ஒரு சிலரின் தவறான செயற்பாடுகள் முழு நாட்டிலுமே அபகீர்த்தியை தேடித்தர முடியும். தம்மைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத எவரும் முப்படையிலோ, பொலிஸ் துறையிலோ கடமையாற்ற முடியாது. இந்நாட்டின் சட்டம், ஒழுங்குக்கு அப்பால் யாரும் செல்லவும் முடியாது.

இந்த புனித பூமியில் முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் அளிக்கப்படும் கெளரவம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சப்ரகமுவ மாகாண அஸ்கிரிய பீட சங்க நாயக்க வேஎல்ல அத்த தஸ்ஸிதேரர் பாராட்டு சாசனப் பத்திரத்தையும், அமைச்சர் டி. டப்ளியூ. ஜே. செனவிரட்னவும், முதலமைச்சர் மஹீபால ஹேரத்தும் பேரானந்த விருதையும் வழங்கி கெளரவித்தனர்.

பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் கூட்டுப்படைத் தளபதி, முன்னாள் இராணுவ தளபதி, முன்னாள் கடற்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு பிரிவு தளபதி ஆகியோருக்கும் பாராட்டு சாசனப் பத்திரங்களும், பேரானந்த விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.இவ்வைபவத்தில் அமைச்சர்களான பவித்ராதேவி வன்னியாரச்சி, பிரேமலால் ஜயசேகர, ஜயதிஸ்ஸ ரணவீர, மஹிந்த ரத்னதிலக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply