பினாமி பெயரில் இயங்கிய நிறுவனம் கண்டுபிடிப்பு: சசிகலாவின் ரூ.15 கோடி சொத்துகள் முடக்கம்

சசிகலா, கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பினாமி பெயரில் சொத்துகளை வாங்கி குவிந்ததாக வருமானவரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சசிகலா, அவரது உறவினர்கள் இல்லங்கள், அலுவலகங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை, மன்னார்குடி, திருவாரூர், தஞ்சை உள்பட 187 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் சசிகலா முறைகேடாக வாங்கி குவித்த சொத்துகளின் ஆவணங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் கையில் சிக்கியது.

இதையடுத்து சுப்ரீம்கோர்ட்டு ஆணையின்படி சசிகலா பினாமி பெயரில் வாங்கி குவித்த சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். அதன்படி பினாமி சட்டத்தின் கீழ் அவர் தொடர்புடைய சொத்துகளை பட்டியலிட்டு முடக்கி வருகின்றனர். ரூ.2,215 கோடி சொத்துகள் முடக்கம் முதற்கட்டமாக சென்னை, கோவை, புதுச்சேரி உள்பட 9 இடங்களில் அவர் வாங்கி குவித்த ரூ1,600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. கடந்த 2019-ம் ஆண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

2-வது கட்டமாக சென்னை போயஸ்கார்டன், தாம்பரம், சேலையூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டது. இந்த நடவடிக்கை கடந்த 2020-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. 3-வது கட்டமாக கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா ஆகிய இடங்களில் உள்ள ரூ.300 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு முடக்கினர். இந்த நிலையில் சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில் இயங்கி வந்த ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனம் சசிகலாவின் பினாமி நிறுவனம் என்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த நிறுவனத்தை முடக்கி உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.15 கோடி என்று வருமான வரித்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். பினாமி சட்டத்தின் கீழ் இதுவரையில் சசிகலாவுக்கு தொடர்புடைய ரூ.2,215 கோடிக்கும் அதிகமான சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியல் இன்னும் நீளுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. அரசியல் பயணத்துக்கு முட்டுக்கட்டை சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த சசிகலா, தற்போது அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கு வியூகம் அமைத்து செயல்பட்டு வரும் வேளையில் அவருடைய சொத்துக்கள் தொடர்ந்து வருமான வரித்துறையால் முடக்கப்பட்டு வருவது அவரது அரசியல் பயணத்துக்கு முட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply