அமெரிக்காவில் கருப்பின இளைஞர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில், கடந்த வாரம் ஜேலண்ட் வாக்கர்(வயது 25) என்ற நபர், அவரது காரில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர் அங்கு நிற்காமல் தனது காரில் வேகமாக சென்றதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார், ஜேலண்ட் வாக்கரின் காரை துரத்திச் சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். இந்நிலையில் ஜேலண்ட் தனது காரில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றுள்ளார்.
அந்த சமயத்தில் போலீசார் அவர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜேலண்ட் வாக்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மொத்தம் 8 போலீசார் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜேலண்ட் வாக்கரின் உடலில் மொத்தம் 60 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் போலீசார் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததால் பாதுகாப்பு கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவரது காரில் துப்பாக்கி இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜேலண்ட் வாக்கர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜேலண்ட் மீது போலீசார் நியாயமற்ற முறையில் தாக்குதல் நடத்தி இருப்பதாகவும், அவர் உயிரிழந்த போது அவரது கையில் எந்த ஆயுதமும் இல்லை எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கருப்பின மக்களை குறிவைத்து போலீசார் தொடர் தாக்குதல்களில் ஈடுபவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்த நிலையில், அதில் சம்பந்தப்பட்ட காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply