பயங்கரவாதத்தை முறியடிக்க பாகிஸ்தானுக்கு இலங்கை இராணுவத்தினர் பயிற்சி

பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு இலங்கை இராணுவத்தினர் பயிற்சியளிப்பார்கள் என்றும், இதற்கான கோரிக்கை அரசாங்கத்தினால் ஏற்கப்பட்டுள்ளது என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அரச படைகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளதையடுத்து, பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான பயிற்சியை அந்த நாட்டு இராணுவத்தினருக்கு வழங்குமாறு பாகிஸ்தான் கோரியுள்ளது. இந்தக் கோரிக்கைக்கு சாதகமாகப் பதிலளிக்கவுள்ளது என்று புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளதாக இது தொடர்பில்  வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடைமுறைச் செயற்பாடுகளின் மூலம் இலங்கை எவ்வாறு அந்த நாட்டில் இருந்த கிளர்ச்சியாளர்களைத் தோற்கடிக்க முடிந்தது என்பதை வெளிநாடுகள் அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, பயங்கரவாதத்தை முறியடிப்பது தொடர்பான 6 வார காலப்பயி்ற்சி நெறி ஒன்றினை இராணுவம் தயாரிக்கும் என்றும், ஆர்வமுள்ள நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினருக்கு இது பயன்படும் என்றும் கூறியுள்ளார்.

பயங்கரவாதத்தை முறியடிப்பது தொடர்பான நுணுக்கங்கள் அடங்கிய பாடச் செயற்திட்டம் ஒன்றையும் அரசாங்கம் தயாரிக்கவுள்ளது என்று இராணுவத் தளபதியை மேற்கோள்காட்டி பிபிசி தனது செய்தியில் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்தினருக்கான இந்தப் பயிற்சிகள் இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற வன்னி்ப்பிரதேசத்தில் வைத்தே வழங்கப்படும் என வெளியாகியிருந்த தகவல்களை மறுத்துரைத்த இராணுவத் தளபதி, அத்தகைய பயிற்சிகள் அவ்வாறு அங்கு வழங்கப்படமாட்டாது என்றும் தெற்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் இது நடத்தப்படலாம் என்றும் இராணுவத்தளபதி மேலும் தெரிவித்துள்ளதாகவும் பிபிசி தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply