வவுனியாவில் விழிப்புக்குழுக்கள்; பொலிஸார் நடவடிக்கை
வவுனியாவில் கிராம சேவைப் பிரிவுகள் தோறும் விழிப்புக் குழுக்களை அமைக்கும் பணிகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அந்தந்தப் பிரிவுகளில் உள்ள மதத் தலைவர்கள், கிராம சேவை அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய இந்த விழிப்புக் குழுக்களில் பொலிஸார் இருவர் அங்கம் வகிப்பர். பிரதேசத்தில் அமைதியை நிலவச் செய்யும் நோக்கில் பொதுமக்களிடையே ஏற்படும் பொதுவான பிணக்குகள், பிரச்சினைகள் போன்றவற்றை தீர்ப்பதில் இக்குழு ஈடுபடும்.
அதேவேளை, சமூக விரோதச் செயல்கள், இளைஞர்கள், சிறுவர்களின் நலன்கள் என்பவற்றில் இந்தக் குழு கவனம் செலுத்தும். அப்பகுதியில் ஏற்படுகின்ற கொள்கைகள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளிலும் இது கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அந்தப் பிரதேசத்தின் பொதுவான பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருந்து செயற்படும் இந்தக் குழு, அந்தப் பிரதேசத்திற்கு வருகின்ற புதியவர்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புக் குழுக்கள் செயற்படத் தொடங்கியதும் அந்தப் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் தொடர்பான விபரக் கோவையும் பதிவில் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply