நிவாரண கிராமங்களிலுள்ள மக்களை கவர எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரம்: அமைச்சர் அநுர பிரியதர்சன
யுத்தம் முடிவடைந்துள்ளதால் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களை கவர்வதற்காக எதிர்க் கட்சிகள் பல்வேறு பொய்யான குற்றச் சாட்டுகளையும் கருத்துக்களையும் கூறி வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் ஊடக அமைச்சில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 இலட்சம் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அந்த மக்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் கிடையாது. புலிகளாலேயே அந்த மக்களுக்கு தமது வீடு வாசல்களை விட்டும் வெளியேற நேரிட்டது.
இடம்பெயர்ந்த மக்களை துரிதமாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிதிவெடிகளை அகற்றுவது இலகுவான காரியமல்ல. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் வரை அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. முகாம்களில் உள்ள மக்களின் கவனத்தை தமது பக்கம் திருப்பவே எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. இதற்காக பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன.
ஊடக சுதந்திரம்
அரசின் மீது குற்றம் சுமத்த எதுவும் இல்லாததால் ‘சுதந்திர மேடை’ என்ற பெயரில் கூட்டம் நடத்தி இல்லாத பிரச்சினைகளை உருவாக்கும் பல்வேறுபட்ட கருத்துக்களை எதிர்க் கட்சிகள் கூறிவருகின்றன. ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதாக ஐ.தே.க. தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் தகவல்களை ஒலி, ஒளிபரப்பவோ தகவல்களை வெளியிடவோ உள்ள உரிமை எந்த வகையிலும் பறிக்கப்படவில்லை. சுதந்திரமாக செயற்பட சகல உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க பேசுவதைக் கேட்பதற்கு கட்சி ஆதரவாளர்கள் கூட வருவது கிடையாது. அவர் தென் மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்க ளுக்கு வருவதை கூட ஐ.தே.க. ஆதரவாளர்கள் விரும்பவில்லை. ஊடக சுதந்திரம் குறித்து மங்கள சமரவீரவும் பேசி வருகிறார். ஊடக சுதந்திரம் குறித்து பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது.
மின்சாரத் திட்டம் மின்சக்தி அமைச்சராக கரு ஜயசூரிய பணியாற்றிய போது வேண்டுமென்றே இரு மின்சாரத் திட்டங்களை ஆரம்பிக்காமல் தடுத்தார். நுரைச்சோலை மின் திட்டம் ஆரம்பிக்க வாய்ப்பு இருந்தும் அவர் அதனை ஆரம்பிக்கத் தவறினார். அரசியல் காரணங்களுக்காக அவர் மேலும் கொத்மலை திட்டத்தை ஆரம்பிக்கவில்லை.
இந்த இரு மின்சாரத் திட்டங்களும் அன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தால் மின்சார செலவுகள் பெரிதும் குறைந்திருக்கும். கருஜயசூரிய அமைச்சராக இருந்த போது மின்கட்டணம் 60 வீதத்தினால் அதிகரித்தது. ஆனால் ஜனாதிபதியின் பணிப்பில் இரு மின்சாரத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூலம் அடுத்த வருடம் முதல் 300 மெகாவோர்ட் மின்சாரம் கிடைக்க உள்ளது. இதன் காரணமாக ஓரிரு வருடங்களில் மின் கட்டணம் குறையும் வாய்ப்பு உள்ளது.
குண்டு மீட்பு
ஜனாதிபதியையும், பாதுகாப்பு செயலாளரையும் கொலை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீட்கப்பட்ட விடயத்தை ஐ.தே.க. கட்டுக்கதை என்றே கூறி வருகிறது. ஐ.தே.க எம்.பிகள் இந்தளவு கீழ் மட்டத்திற்கு விழுந்துள்ளனர். மன்னாரில் குண்டு பொருத்திய வான் பிடிக்கப்பட்ட சம்பவத்தையும் பலரும் பொய் என்று கூறினர். ஆனால் வான் ஒரு இடத்திலும் குண்டுகள் வேறொரு இடத்திலுமே பிடிபட்டன. கடந்த காலங்களில் பொலிஸார் சிறப்பாக சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர். அமைச்சர் ஒருவர் தவறாக செயற்பட்ட விடயத்திலும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இராணுவத்தின் மீது சேறு
இராணுவத்தின் மீது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலே செனல் 4 தொலைக் காட்சியில் இராணுவத்தினர் சிவிலியன்களை கொலை செய்வது போன்ற வீடியோக்களை ஒளிபரப்பப்பட்டுள்ளது. உலகில் ஒழுக்கத்தைப் பேணி நடக்கும் இராணுவம் இலங்கை இராணுவமாகும். வேண்டுமென்றே திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட காட்சிகளே சர்வதேச ஊடகங்களினூடாக காண்பிக்கப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டை அரசு முழுமையாக மறுத்துள்ளது. இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானிய அரசுக்கு தனது அதிருப்தியை தெரிவிக்கும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply