இலங்கையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும்: அமெரிக்கா
இலங்கையில் விரைவில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வுத் திட்டமொன்றை நோக்கிய முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வின் மூலம் மட்டுமே நாட்டில் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும் எனவும், பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும் எனவும் மத்திய மற்றும் தென் ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் இந்திய ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய ஊடகவியலாளர்களுக்கும் ரொபர்ட் ஓ பிளக்கிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. மனிதாபிமான நிலவரம் மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகிய இரண்டு முனைகளில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 250,000த்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் சுதந்திர நடமாட்டம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக மக்களை தங்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள் இடம்பெயர் மக்களை மீளக் குடியமர்த்துவதாக இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதி மொழியை வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு சர்வதேச தரத்திற்கு அமைவாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் தொண்டு நிறுவனங்கள் மனிதாபிமான பணிகளை தொடர அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடன் விரிவான முறையில் கலந்தாலோசித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாபதித் தேர்தலுக்கு முன்னர் அதிகாரப் பகிர்வு தொடர்பிலான எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாது என்ற ஜனாதிபதியின் கூற்று தொடர்பில் தாம் கவலையடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டம் குறித்த நடவடிக்கைகள் காலம் தாழ்த்தாது எடுக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply