சக்வித்தி ரணசிங்கவுக்கு 5 வருடங்கள் ஒத்திவைத்த 22 வருட சிறை
சக்வித்தி ரணசிங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நிதி மோசடி தொடர்பான 11 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட சக்வித்தி ரணசிங்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜாவினால் நேற்றையதினம் (14) இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
அபய ரணசிங்க ஆரச்சிலாகே சந்தன வீரகுமார எனும் இயற்பெயரைக் கொண்ட பிரபல ஆங்கில ஆசிரியரான சக்வித்தி ரணசிங்கவினால் 2003 காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு நடாத்திச் செல்லப்பட்ட Sakvithi Housing and Construction (Pvt.) Ltd எனும் நிறுவனத்தில் வைப்பிலிடப்பட்ட வைப்பாளர்களின் ரூ. 162.8 கோடி (ரூ. 1,628 மில்லியன்) பெறுமதியான நிதியை மோசடி செய்ததாக, அவர் மீது குற்றவியல் நம்பிக்கை மோசடி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி நடாத்திச் செல்லப்பட்ட குறித்த நிதி நிறுவனம் மூலம் அதிக இலாபம்/ வட்டி பெற்றுத் தருவதாக இவ்வாறு பொதுமக்களை ஏமாற்றி பணத்தை வைப்பிலிடச் செய்யச் செய்ததோடு, போலியான உறுதிப்பத்திரங்களை பயன்படுத்தி காணிகளை விற்பனை செய்திருந்தார்.
இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்ற நிலையில், கடந்த 2008 செப்டெம்பர் மாதம் அவர் பணத்துடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு சக்வித்தி ரணசிங்க மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் மிரிஹானை பொலிஸாரால் நவகமுவவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன் போது மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் பல்வேறு சூதாட்ட விடுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டு அனைத்து பணத்தையும் இழந்திருந்தமை தெரிய வந்திருந்தனது.
அதன் பின்னர் மோசடி தொடர்பான குற்றத்தை ஒப்புக் கொண்ட அவருக்கு கடந்த 2013 ஜனவரி 31ஆம் திகதி 2 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சக்வித்தி ரணசிங்க கடந்த 2019 ஜூன் 10ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் விடுதலையான அவர் மீது 11 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மாஅதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வகையில், சக்வித்தி ரணசிங்கவுக்கு எதிரான 11 குற்றச்சாட்டுகளுக்கும் தலா ரூ. 25,000 அபராதம் விதித்த நீதவான், குறித்த அபராதத்தை செலுத்தத் தவறினால் அவை ஒவ்வொன்றுக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
அவருக்கு உதவிய குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரது மனைவிக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையை வழங்கி நீதவான் தீர்ப்பு வழங்கியிருந்தார்.
அத்துடன் அவருக்கு ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரினதும் அபராதத் தொகையை இன்று (15) வியாழக்கிழமை செலுத்துவதற்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா கால அவகாசம் வழங்கியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply