வன்னியில் கண்ணிவெடிகளை அகற்ற சர்வதேசத்தின் உதவி தேவை : இராணுவத் தளபதி

வன்னியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு சர்வதேச நாடுகளது ஒத்துழைப்பு அவசியம் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளை தற்போது இலங்கை இராணுவப்படையினரே அதிகமாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பானில் நடைபெற்று வரும் ஆறாவது பசுபிக் இராணுவத் தளபதிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஆசிய பசுபிக் நாடுகளைச் சேர்ந்த 22 இராணுவத் தளபதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மேலும் தெரிவிக்கையில்,

“நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க சகல நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் கிடைக்கப் பெற்ற வெற்றி தொடர்பில் ஆய்வுகளை நடத்த, தமது உயர் பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி வைக்கப் பல நாடுகள் தீர்மானித்துள்ளன. அமெரிக்கா, ஜப்பான், கொரியா, இந்திய உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த இராணுவத் தளபதிகள் இலங்கையின் இராணுவத்திடம் பயிற்சி பெறுவதற்காக கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை இராணுவத்தினர் பயங்கரவாதத்தை எப்படி முறியடித்தனர் என்பது குறித்துக் கற்றுக் கொள்வது தொடர்பில் அவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்” என்றார்.அதேவேளை, அமெரிக்க பசுபிக் இராணுவத் தளபதியுடன், இலங்கை இராணுவத் தளபதி பிரத்தியேக சந்திப்பொன்றை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply