பத்துவருட தேசிய கல்விக்கொள்கையை விரைவில் ஜனாதிபதிக்கு கையளிப்போம் : கல்வி அமைச்சர்

தேசிய கல்விக்கு பத்துவருட கல்விக்கொள்கை தேசிய கல்வி ஆணைக்குழு தயாரித்து வருகின்றது. சட்ட ரீதியில் அதனை ஜனாதிபதிக்கு விரைவில் கையளிக்க இருக்கின்றோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஆளும் கட்சி உறுப்பினர் டீ. வீரசங்கவினால் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கல்வி கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். தற்போது இருக்கும் கட்டமைப்பு தற்காலத்துக்கு பொருத்தம் இல்லாமல் இருக்கின்றது.

அதனால் 10வருட தேசிய கல்விக்கொள்கையை தேசிய கல்வி ஆணைக்குழு தயாரித்து வருகின்றது. இதனை ஆரம்பமாக சட்ட ரீதியில் ஜனாதிபதிக்கு கையளிக்கவேண்டும். அதனை நாங்கள் விரைவில் மேற்கொள்வோம்.

குறிப்பாக தற்போது பாடசாலைகள் வகைப்படுத்தப்பட்டிருப்பது கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு மாத்திரமே புரிகின்றது.

அதனால் இந்த முறையை மாற்றி 1முதல் 5வரை ஆரம்ப பிரிவு எனவும் 6முதல் 9வரை கனிஷ்ட பிரிவு எனவும் 10முதல் 13வரை சிரேஷ்ட பிரிவு எனவும் வகைப்படுத்த திட்டமிட்டிருக்கின்றோம்.

இந்த நடைமுறையே வெளிநாடுகளிலும் இருந்து வருகின்றது. அதேபோன்று நாட்டில் 120 வலயக் கல்வி காரியாலங்கள் இருக்கின்றன. இவை அதிகரிக்கப்படும்.

ஏனெனில் சில வலயக் கல்வி காரியாலயங்களுக்கு கீழ் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் உள்வாங்கப்படுவதால் சரியான முறையில் பாடசாலைகள் கண்காணிக்கப்பட முடியாமல் இருக்கின்றன.

கொழும்பு வலய கல்விக் காரியாலயத்தில் 144 பாடசாலைகள் இருக்கின்றன. ஒரு இலட்சத்தி 80ஆயிரம் மாணவர்கள் இருப்பதுடன் 11ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.

மேலும் கல்வி கட்டமைப்பை தயாரிக்கும் நடவடிக்கையை அடுத்த வருடம் ஆரம்பிக்கிறோம், அதற்கு இணையாக பாடத்திட்ட மேம்பாட்டை தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தற்போது ஆரம்பித்திருக்கின்றது.

எனவே கல்வி மறுசீரமைப்பின் திட்டம் மற்றும் வேலைத்திட்டத்தை சட்ட மூலம் ஒன்றின் ஊடாக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply