திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமே இது: சஜித் பிரேமதாச

திருடர்களை பாதுகாத்துக்கொள்வதற்காக திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமே இது. இப்படியான அரசாங்கத்துக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது? மக்களை வீழ்த்திவிட்டு, பிணங்கள் மீது நின்று மீண்டெழுவதில் பயன் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் நுவரெலியா விஜயத்தின் பொழுது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணனின் ஏற்பாட்டின் பேரில் நேற்று (29) இரவு நுவரெலியா அரலிய விருந்தகத்தில் நுவரெலியா, கந்தபளை, இராகலை ஆகிய நகரங்களின் வர்த்தகர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கியதோடு, வர்த்தகர்களும், விவசாயிகளும் தாங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக சஜித் பிரேமதாசவின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு, இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் வரவு செலவு திட்டத்தின் பொழுதும் குரல் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததோடு, எதிர்கட்சி தலைவர் தலைமையில் உருவாக்கப்படவுள்ள எதிர்கால அரசாங்கத்தில் இதற்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

இதன்போது வருகை தந்தவர்களின் அனைத்து குறபாடுகளையும் எதிர்கட்சி தலைவர் குறிப்பாக எடுத்துக்கொண்டதுடன், அதற்கான பதிலையும் வழங்கியுள்ளார்.

இந்நிகழ்வின் தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச மேலும் கூறியவை வருமாறு,

” கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர், கோடிஸ்வரர்களுக்கு 600 பில்லியன் ரூபா வரிச்சலுகை வழங்கியதால் அரச வருமானம் 12 வீதத்திலிருந்து 8 வீதமாக சரிந்தது. இதனால் சர்வதேச நிதி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை பின்னிலைப்படுத்தப்பட்டது. சர்வதேச மூலதனச் சந்தைக்கு சென்று கடன்பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அந்திய செலாவணி கையிருப்பை பயன்படுத்தி கடன் செலுத்தினர். இதனால் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டது. அத்துடன், திட்டமில்லாத பொருளாதாரக் கொள்கைகளால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது.

தன்னைசூழ முட்டாள்களை வைத்துக்கொண்டு தன்னிச்சையாக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ச, இருக்கின்ற அதிகாரம் போதாதென 20 ஆவது திருத்தச்சட்டத்தையும் நிறைவேற்றி நாட்டை நாசமாக்கினார். இறுதியில் வீடு செல்ல வேண்டி ஏற்பட்டது.

மக்கள் இணைந்து ராஜபக்சக்களை விரட்டினாலும், ராஜபக்சக்களின் ஆட்சிதான் தற்போது தொடர்கின்றது. தம்மை பாதுகாக்ககூடிய ஒருவரை மொட்டு கட்சியின் ஜனாதிபதி ஆக்கியுள்ளனர். ராஜபக்சக்களை காக்க 134 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது திருடர்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் இது. திருடர்களை பாதுகாப்பார்களேதவிர, திருடர்களை பிடிக்கமாட்டார்கள். இது ராஜபக்சக்களை காப்பதற்கான அரச பொறிமுறையாகும். ” – என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply