தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாளை ஜனாதிபதியுடன் சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசவுள்ளது. அலரிமாளிகையில் நாளை பி. ப. 4 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம் பெறுமென தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவரான இரா. சம்பந்தன் தலைமையிலான ஐவர் கொண்ட குழு இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளுமெனவும் அவர் கூறினார். ஜனாதிபதியுடனான இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்று கொழும்பில் கூடி ஆராயவுள்ளனர். ஏற்கனவே ஜனாதிபதியைச் சந்திக்க நாம் முடிவு செய்திருந்தோம். என்றாலும், வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் பல்வேறு காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. ஆனாலும், நாளை நாம் சந்திக்கத் தீர்மானித்துள்ளோம்” என்றார்.
“ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அரசியல் விடயங்கள் தொடர்பாக ஆராய்வதைத் தவிர்த்து மீள் குடியேற்றம் பற்றியே பேசவுள்ளோம்” என்று கூறிய அவர், வடக்கில் இடம் பெயர்ந்திருப்போர் நிலைமை, அவர்களது மீள் குடியேற்றத்தைத் துரிதப்படுத்துதல் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வருவோம் என்றார்.
இதேபோல, வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட சகல முஸ்லிம்களையும் மீளக் குடியேற்றுவது பற்றியும் ஜனாதிபதியுடன் தாங்கள் பேசப்போவதாகவும் அவர் சொன்னார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “தற்போதைய நிலையில் புதிய தொரு அரசியல் நிலைப்பாடு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து வருகிறது” என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யுத்தம் முழுமையாக முடிவடைந்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசுவது இதுவே முதற் தடவையாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply