கிளிநொச்சி பகுதியினை நோக்கி முன்னேறும் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் சமர் – 27 படையினர் பலி: பலரைக் காணவில்லையாம்

கிளிநொச்சியினை நோக்கி மூன்று முனைகளில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் படையினர் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அடம்பன், புதுமுறிப்புக்குளம், திருமுறிகண்டி பகுதிகளிலிருந்தே படையினர் கிளிநொச்சி நோக்கிய முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை ஆரம்பமான மோதல் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்துள்ளது. நேற்று இடம்பெற்ற மோதலில் 27 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 70 படையினர் வரையில் காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் 120 க்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் 80 பேர் வரையில் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியை நோக்கிய படை நகர்வில் படையினர் நகரை அண்மித்து விட்டனர் என்றும் இந்த மோதலில் புலிகளுக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், படையினரில் பலர் காணாமல் போயுள்ளனர் எனவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. இது தொடர்பில் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் கூறியதாவது:

கிளிநொச்சி நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த மண்மேடுகளை மும்முனைகளிலிருந்தும் தகர்த்தவாறு இன்று அதிகாலை முதல் படையினர் கடும் முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டனர். நேற்று அதிகாலை 3.10 மணியளவில் ஆரம்பித்த இருதரப்பு மோதல்கள் மாலை 6 மணிவரை நீடித்துள்ளன. அத்துடன், இன்று அதிகாலையும் அவை தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை கிளிநொச்சி நிவில், யாழ்ப்பாணம் கிளாலி மற்றும் முல்லைத்தீவு ஆண்டான்குளம் ஆகிய பகுதிகளிலும் இருதரப்புக்களுக்குமிடையில் நேற்று முழுவதும் சுமார் 8 மணித்தியாலங்களாக கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதன் போது படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மோதல்களை அடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் பலவும் மீட்கப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply