அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தாங்கள் தயாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது

நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக ஒன்றாக இணைந்து செயலாற்றுவோம். விசேடமாக நாட்டில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தாங்கள் தயாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அலரிமாளிகையில் நேற்று மாலை இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இதில் கலந்து கொண்டார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 03 மணித்தியாலங்களாக இடம்பெற்றன. பயங்கரவாதத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக அரசு முன்னுரிமை அளித்து செயற்படுவதாகவும் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசின் நிகழ்ச்சிநிரலில் முதலில் இருப்பது மக்களின் பாதுகாப்பும் நலன்புரியும் என்றும் இங்கு கூறினார்.

அரசு முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்துக்கமைய கூடிய விரைவில் மீளக்குடியமர்த்தலை நிறைவு செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரமாக ஜனநாயகமாக சேவையாற்ற கிடைக்குமென்றும் இங்கு நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, மீண்டும் எல்.ரீ.ரீ.ஈ.க்கோ அல்லது பயங்கரவாத அமைப்புக்கோ மக்களை பலியெடுப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது கூறினார். இந்தப் பேச்சுவார்த்தையினை முதலாவது படியாக கருதி எதிர்காலத்தில் படிப்படியாக நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டு செயலாற்றுவதற்காக இவ்வாறான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்கு சுட்டிக்காட்டியது.

இதில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, ரிசாட் பதியுதீன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், எம்.பியுமான பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் உட்பட தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தா, கே. தங்கேஸ்வரி, சிவசக்தி ஆனந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், ஆர். எம். இமாம் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply