கோட்டா ஜனாதிபதியாக இருந்த போது, ஜனாதிபதி மாளிகை மற்றும் அவருடைய மிரிஹான இல்லத்தின் செலவுகள் எவ்வளவு?

கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி மாளிகையின் செலவுகள், கோட்டாவின் மிரிஹான இல்லத்தின் செலவுகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்மிரர் ஊடகவியலாளர் பா.நிரோஸ் விண்ணப்பித்த விண்ணப்பத்துக்கான தகவல்களை வழங்கினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென தெரிவித்து அந்தத் தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரியான ஜனாதிபி செயலகத்தின் உதவிச் செயலாளர் எஸ்.கே. ஹேனதீர மறுத்துவிட்டார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 5 (1) (அ) மற்றும் 5 (1) (ஆ) (i) ஆகிய பிரிகளைக் காரணங்காட்டி RTI விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 (1) (அ) பிரிவின்படி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் அனுமதியின்றி கோரப்பட்டத் தகவல்களை வழங்க முடியாது எனவும், 5 (1) (ஆ) (i) பிரிவின்படி கோரப்பட்ட தகவல்களை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் குறிப்பிடப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தகவல் அதிகாரியால் வழங்கப்பட்ட பதிலுக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்தின் குறித்தளிக்கப்பட்ட அதிகாரிக்கு மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தபோதிலும், குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடமிருந்து விண்ணப்பம் கிடைத்துள்ளதை உறுதி செய்யும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடிதமே 14.11.2022 அன்று கிடைத்திருந்தது.

விண்ணப்பத்துக்கான பதில்கள் 14 நாட்கள் கடந்தும் வழங்கப்படவில்லை என்பதால் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் இது தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply