பொருளாதார நெருக்கடி நிலவுவதாக வெளியுலகுக்கு காட்ட ரணில் முயற்சி: அமைச்சர் அநுர யாப்பா

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுவதாக வெளியுலகுக்குச் சித்தரித்துக் காண்பித்து அரசியல் இலாபம் தேடும் நோக்கில், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறுபிள்ளைத் தனமாகப் பொய் கூறிவருகிறாரென்று அமைச்சரவைப் பேச்சாளர்  தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். நீண்ட காலம் பதவிக்கு வர முடியாதென்பதாலும், மக்களின் செல்வாக்கை இழந்து வருவதாலும், அரசாங்கத்தின் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் சுமத்தி வருகிறாரென்றும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  முற்பகல் நடைபெற்றபோதே அமைச்சர் யாப்பா இதனைத் தெரிவித்தார். அரசியல் தந்திரோபாயமாகவே தற்போது ஐக்கிய தேசியக் கட்சி பொய் கூறி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஹிட்லரின் பொய்க்கார உதவியாளர் கோயபல்ஸைப் போன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொய்ப் பேசுவதுடன், ‘லப்பாய், சிப்பாய்’ தரத்திற்குத் தாழ்ந்து கூற்றுகளை வெளியிட்டு வருவதாகவும் விசனம் தெரிவித்தார்.

“மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலைத் தோற்றுவிக்கவே அரசாங்கம் செயற்படுகிறது. இதனை சீர்குலைப்பதற்கான சதி முயற்சி தோல்வி கண்டதால், இப்போது தங்கக் கதை கூறுகிறார்கள். எமது கையிருப்பு குறைந்து பொருளாதார நெருக்கடி நிலவுவதாகக் காண்பிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார். தங்கத்தை விற்பதற்கு எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. நாளாயிரம் மில்லியன் டொலர் கையிருப்பில் உள்ளது. உண்மையில் அவர் அரசா ங்கத்திற்கு எதிராகக் குற்றஞ்சாட்டவில்லை. மாறாக நாட்டுக்கு எதிராகவே குற்றஞ்சாட் டுகிறார்” என்றும் குறிப்பிட்ட அமைச்சர்,

“உலகில் ஐக்கிய தேசியக் கட்சியில் மட்டும் தான் தலைவரை நீக்க முடியாது. நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்களைக் கொழும்புக்கு அழைத்து வந்து கையை உயர்த்தச் செய்தாலும், தலைவரை மாற்ற முடியாது. இது தான் அவர்களின் ஜனநாயகம்” என்றவர், ஓர் அரசியல் இராஜதந்திரி என்ற நிலையிலிருந்து கீழிறங்கி விவேகமற்ற முறை யில் கருத்துக்களைக் கூறுகிறாரென்றும் குறிப்பிட்டார்.

“அபிவிருத்திக்கு நிதி பயன்படுத்தவில்லை என்று ஐ.தே.க. எம்.பி. கபீர் ஹாசீம் கூறியிருந் தார். அது அப்பட்டமான பொய்யாகும். அரசாங்கம் தற்போது முன்னெடுக்கும் சகல அபிவிருத்திப் பணிகளுக்கும் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது. 2007 இல் 1674 மில்லியன் டொலரும், 2008 இல் 2069 மில் லியன் டொலரும், 2009 இல் 8011 மில்லி யன் டொலரும் வெளிநாட்டு நீதியாகக் கிடைக்கப் பெற்றுள்ளது” என்றும் அமைச்சர் மேலும் கூறினார். நேற்றைய செய்தியா ளர் மாநாட்டில், தகவல் ஊடகத்துறை அமை ச்சின் ஆலோசகர் சரித்த ஹேரத், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply