இடம்பெயர் மக்களின் நடமாட்ட சுதந்திரத்துக்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம் : அமெ. புதிய தூதுவர்
இலங்கையின் வடக்கில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் நடமாட்ட சுதந்திரத்துக்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம் என்று இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக பொறுப்பேற்றுள்ள பற்றீசியா ஏ. பியூடெனிஸ் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“ஊக்கமும் ஆக்கமும் உள்ளதும் சுதந்திரமானதுமான ஊடகம், ஜனநாயகத்தின் அத்தியாவசியமான அம்சங்களுள் ஒன்றாகும். மாறுபட்ட கருத்துகள் செவிமடுக்கப்பட வேண்டும். சகித்துக் கொள்ளப்பட வேண்டும். ஊடகங்களை அடக்குபவர்கள் அல்லது அச்சுறுத்துபவர்கள் முழு நாட்டுக்கும் கேடு விளைவிப்போராவர்” என்றும் குறிப்பிட்டுள்ள அவர். தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது : ஜனாதிபதி ஒபாமாவின், அறிமுக நற்சான்றுக் கடிதத்தை ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் கையளிக்கும் பெருமையும் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைத் தூதுவராக எனது பணிக்காலத்தை ஆரம்பிக்கும் பெருமையும் கடந்த வியாழக்கிழமை எனக்குக் கிட்டியது.
இலங்கை நாட்டைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அதன் கலாசாரப் பொக்கிஷங்கள் பலவற்றையும் இயற்கைப் பொக்கிஷங்களையும் பற்றி அறிந்து கொள்வதற்கும் ஐக்கிய அமெரிக்காவைப் பற்றிய உங்களுடைய தகவு நோக்குகள், எண்ணக் கருத்துக்கள் பற்றியும் இவ்விரு நாடுகளுக்கிடையில் நிலவும் தொடர்புகள் பற்றியும், கேட்டறிந்து கொள்வதற்கும் நான் ஆர்வத்துடன் காத்திருக்கின்றேன்.
ராஜதந்திர சேவையில் கடந்த 30 ஆண்டுகளாக………….
ராஜதந்திர சேவையில் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள நான், முப்பதாண்டு காலத்தில் ஏறத்தாழ அரைப்பகுதியை தென் ஆசியாவில் கழித்திருக்கிறேன் என்ற வகையில், தென் ஆசியாவுக்கு மீண்டும் திரும்புவதையிட்டு தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நமது நாடுகள் முதன் முதலாக இராஜதந்திர உறவுகளை நிறுவிய கடந்த ஆறு தசாப்தங்களில், நமது உறவுகள், பல கூறுகளைக் கொண்டனவாகவும் பரஸ்பரம், நன்மை பயக்கும் தோழமையுடன் கூடியனவாகவும் இருந்து வந்துள்ளன. சர்வதேச அரங்கில், பெருந்தொகையில் மக்கள் அழிவை ஏற்படுத்தும் ஆயுதப் பரவல் சம்பந்தப்பட்ட அச்சுறுத்தல் பற்றியும் கடல் மார்க்கங்களைப் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருத்தல் பற்றியும் நம் இரு நாடுகளும் அக்கறை கொண்டுள்ளன. வணிகத்திலும் வர்த்தகத்திலும் இலங்கைப் பொருட்களுக்கு, ஐக்கிய அமெரிக்காவே முன்னணி வகிக்கும் ஏற்றுமதிச் சந்தையாகத் திகழ்கின்றது.
அதேவேளை, அமெரிக்கப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் இலங்கை, ஒரு பிரதான சேரிடமாக அமைந்துள்ளது. இராணுவக் கூட்டுறவைப் பொறுத்தளவில், இலங்கை இராணுவத்தின் நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள், ஐக்கிய அமெரிக்கப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களிலும் மாநாடுகளிலும் கல்விப் பரிமாற்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளனர். அபிவிருத்திக்கான உதவியை நோக்கும் போது, 1956 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களுக்காக, இரண்டு பில்லியனுக்கும் அதிகமான ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
இவ்வருடத்தில் மட்டும், இலங்கையின் வடக்கில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏழு பில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்குவதற்கு உதவியாகக் கொடுக்கப்பட்ட நிதியும் இதிலடங்கும். கல்வித்துறையை எடுத்துக்கொண்டால், ஐக்கிய அமெரிக்கக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்பதற்கு, வருடாந்தம் 2000இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பதிவு செய்து கொள்கிறார்கள்.
அமெரிக்க அறிஞர்கள் பலரும் அமெரிக்க மாணவர்கள் பலரும், இலங்கையின் கலாசாரத்தைப் பற்றியும் மரபுகளைப் பற்றியும் கற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்கிறார்கள். கலாசாரத்தையும் கலைகளையும் எடுத்துக் கொண்டால், இடைவிடாது, அமெரிக்க, இலங்கைச் சமயத் தலைவர்களும் புலமை சார்ந்த சிறப்பறிஞர்களும் கலைஞர்களும், நம் இரு நாடுகளினதும் மரபுரிமைக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர்.
உதாரணமாக, இலங்கைக்கு வந்த ஹென்றி ஸ்டீல் ஒல்கொட், இத்தீவில் பல பௌத்த பாடசாலைகளை நிறுவினார். இவற்றுட் பல இன்னமும் இயங்கி வருகின்றன. இவ்வுறவுகளை விரிவுபடுத்தி ஆழமாக்குவதற்காக உழைப்பதே என் கடமையும் விருப்பமுமாகும்.
வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நேரத்திலும் பெரும் சந்தர்ப்பம் நிலவும் நேரத்திலும், நான் உங்கள் நாட்டிற்கு வந்திருக்கிறேன். ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாகப் போர் இலங்கையை அழித்தது. இந்நாட்டில் வாழும் மக்களுள் ஏறத்தாழ அரைவாசிப்பேர், இம் மோதலுக்கு முற்பட்ட காலத்தை நினைவுபடுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு இளையோராக இருக்கிறார்கள். மோதலின் முடிவை, ஐக்கிய அமெரிக்கா வரவேற்கின்றது.
1997 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய அமெரிக்கா, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்த்துக் கொண்டது. அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பொருள் உதவி வழங்கியோரைப் பற்றிப் புலனாய்வு செய்து, வெற்றிகரமாக தண்டனை வழங்கியுள்ளது.
இராணுவ மோதல் முடிவுக்கு வந்த பின்னர், நீண்ட செயன்முறையாகிய இணக்கப்பாடு ஆரம்பமாகின்றது. நாடு முழுவதிலும், மக்களுக்கிடையிலும் எவ்வாறு நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையையும் ஏற்படுத்தலாம் என்பதை இலங்கை மக்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கான வழியை வேறு எவரும் அமைத்துக் கொடுக்க முடியாது.
இப்பதவியில் முன்னர் இருந்தவர்களைப் போல, நமது ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கு நான் செயலார்வத்துடன் முயற்சி செய்வேன். அவர்களைப் போலவே, ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் மூலமாக எப்பொழுதுமே அமைந்திருந்த சில அடிப்படைத் தத்துவங்களை நானும் கடைப்பிடித்து நடப்பேன்.
மனித உரிமைகளை முன்னேற்றுதல்…
மனித உரிமைகளை முன்னேற்றுதல் நமது முக்கியமான, உலகளாவிய அக்கறைகளுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்கா உட்பட, எந்தவொரு நாடுமே, மனித உரிமைகளைக் காத்தல் தொடர்பாக முழுமையான பதிவைக் கொண்டதாக இல்லை.
நாங்களும் விமர்சிக்கப்பட்டிருக்கிறோம் எனினும் நமது சொந்தக் குறைபாடுகளை அணுகுவதற்கு முயலும் அதேவேளை, உலகம் முழுவதிலும் வாழும் மக்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரங்களுக்காகவும் செயற்பட வேண்டியது நமது பொறுப்பென்று நாம் நம்புகின்றோம்.
எனவே, இலங்கையில், வடக்கில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் நடமாட்டச் சுதந்திரத்திற்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம் என்பதே இதன் கருத்தாகும். இந்த இலங்கைப் பிரஜைகள், பல தசாப்தங்களாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடுங்கோன்மையின் கீழ் இன்னல்பட்டுள்ளார்கள்.
புதிய இலங்கையில் தமது வாழ்வை மீள ஆரம்பிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. அவர்கள், அவ்வாறு செய்வதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டுமென்று நாம் தூண்டுகின்றோம்.
ஊக்கமும் ஆக்கமும் உள்ளதும் சுதந்திரமானதுமான ஊடகம், ஜனநாயகத்தின் அத்தியாவசியமான அம்சங்களுள் ஒன்றாகும். மாறுபட்ட கருத்துக்கள் செவிமடுக்கப்பட வேண்டும். சகித்துக் கொள்ளப்பட வேண்டும். ஊடகங்களை அடக்குபவர்கள் அல்லது அச்சுறுத்துபவர்கள் முழு நாட்டிற்கும் கேடு விளைவிப்போராவர்.
நீண்ட வரலாற்றுடன் கூடிய நமது தொடர்பு, வளர்வதற்கும் விரிவடைவதற்கும் உள்ளார்ந்த பெரும் சாத்தியப்பாடு உண்டு. இதை யதார்த்தமாக்குவதற்காக எனது பதவிக்காலத்தில் மக்களோடும் அரசாங்கத்தோடும் சேர்ந்து உழைப்பதற்கும் நான் காத்திருக்கின்றேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply