இடம்பெயர்ந்தவர்களில் மேலும் ஒரு தொகுதியினரை சொந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

இடம் பெயர்ந்து உறவினர் நண்பர்களது வீடுகளிலும், வேறிடங்களிலும் வசித்து வந்த 5320 பேரை அவர்களது சொந்த கிராமங்களில் மீள் குடியேற்றம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு வவுனியாவில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களாகிய விநாயகமூர்த்தி முரளிதரன், எச்.எம்.சந்திரசேன, ரீ.பி.எக்கநாயக்க ஆகியோரும், வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி, வவுனியா அரசாங்க அதிபர், முக்கிய இராணுவ பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய பசில் ராஜபக்ச, பயங்கரவாத நிலைமை காரணமாக சொந்தக் கிராமங்களைவிட்டு பல வருடங்களாக இடம்பெயர்ந்திருந்தவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக இன்று இங்கு கூடியுள்ள நீங்கள் உங்களது சொந்த இடங்களுக்குச் செல்கின்றீர்கள். உங்களை மீள் குடியேற்றுவதற்காக இராணுவத்தி்னர், பொலிசார் மற்றும் சிவில் அதிகாரிகள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தி்யில் செயற்பட்டுள்ளார்கள். என தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் மக்கள் இயற்கை அழிவுகள், மனிதர்களின் செயற்பாடுகளின் காரணமாக இடம்பெயர்ந்துள்ளார்கள். எனவே இலங்கையில் மட்டும் மக்கள் இடம்பெயரவில்லை. எமது நாட்டில் நிலவிய பயங்கரவாத நிலைமை காரணமாக நீங்கள் உங்களது சொந்த கிராமங்களைவிட்டு வெளியேற நேர்ந்தது.

பயங்கரவாத நடவடிக்கைகள் உங்களை வெளியேற்றுவதற்கு அதிக நேரம் எடுக்க வில்லை, ஆனால் உங்களை உங்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்குப் பாரிய பணிகளை பலரும் செய்ய வேண்டியிருக்கின்றது. இன்று உங்களது சொந்த இடங்களுக்குச் செல்கின்ற நீங்கள் உங்கள் விவசாயத் தொழில்களை மேற்கொண்டு நிம்மதியாக வாழ வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இன்னுமொரு தடவை இந்த நாட்டில் பயங்கரவாதம் தலையெடுப்பதற்கு இடமளிக்கக் கூடாது. அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாமல் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்களைப் போன்று இடம்பெயர்ந்து இருக்கின்ற ஆயிரக்கணக்கானவர்களையும் அவர்களது சொந்த இடங்களில் மீண்டும் படிப்படியாக மீள்குடியேற்றம் செய்ய வசதியாக இருக்கும். கிராமங்களில் நிலைமைகள் மோசமடைந்தால் இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் குடியமர்த்துவது இயலாத காரியமாகிவிடும். எனவே இந்த விடயத்தை கவனத்திற்கொண்டு நீங்கள் செயற்பட வேண்டும்.

வரவேற்புரை நிகழ்த்திய வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், 35 கிராமங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதாகவும், இவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஜனாதிபின் பணிப்பின்பேரில் ஆலோசகராகிய பசில் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலில், இராணுவ பொலிசாரின் உதவி ஒத்துழைப்புடன் அந்தந்த இடங்களில் அதிகாரிகள் துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மீளக்குடியமர்பவர்களுக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச மற்றும் அமைச்சர்களினால், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களும் வைபவரீதியாக வழங்கப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply