ஆப்கானிஸ்தானில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெறாவிட்டால் பயங்கர விளைவுகள் ஏற்படும் ஜெர்மனிக்கு அல்கொய்தா மிரட்டல்

ஆப்கானிஸ்தானில் இருந்து இராணுவத்தை ஒரு வாரத்துக்குள் வாபஸ் பெறாவிட்டால், பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று ஜெர்மனிக்கு அல்கொய்தா மிரட்டல் விடுத்து உள்ளது.ஜெர்மனி நாட்டில் வருகிற 27-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் அந்த நாட்டுக்கு அல்கொய்தா மிரட்டல் விடுத்து உள்ளது. அல்கொய்தா தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ கேசட்டில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு முஸ்லிம் பேசி இருக்கிறார். அவர் பெயர் பெக்கே ஹராச். இவர் தன் பெயரை அபுடால்கா என்று மாற்றிக்கொண்டு இருக்கிறார்.

அவர் ஜெர்மனி மொழியில் இந்த வீடியோ கேசட்டில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஜெர்மனி நாட்டு ஆட்சியாளர்கள் போரை தொடர்ந்து நடத்துவது என்று தீர்மானித்தால் அதன் எதிரொலியை தேர்தலில் பார்க்கலாம். நாட்டின் கொள்கைகளை தீர்மானிப்பதற்கு தேர்தல் தான் சரியான வாய்ப்பு ஆகும். ஒரு வாரத்துக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து ஜெர்மனி வீரர்கள் வெளியேறினால், ஜெர்மனியில் உள்ள கடைசி போராளியும்(முஜாஹீதினும்) வெளியேறி விடுவார். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறாவிட்டால், பயங்கர விளைவுகள் ஏற்படும். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் எச்சரித்து இருக்கிறார்.

மொராக்கோ நாட்டை சேர்ந்த ஜெர்மன் இனத்தவரான ஹராச், பல அல்கொய்தா பிரசார வீடியோ கேசட்டுகளில் தோன்றி இருக்கிறார். அவர் இந்த வீடியோ கேசட்டில், தேர்தல் முடிந்த 2 வாரங்களுக்கு பொது இடங்களில் இருந்து ஜெர்மனியில் உள்ள முஸ்லிம்கள் ஒதுங்கி இருக்கவேண்டும் என்றும் எச்சரித்து இருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு ராணுவங்கள் தலீபானுடன் சண்டையிடுவதை ஜெர்மனி அரசியல் கட்சிகளும், மக்களும் விரும்பவில்லை என்ற போதிலும் இடதுசாரி தலைவர் டை லிங்கே மட்டுமே ராணுவம் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று கோரி இருக்கிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply