ஜனவரியில் இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் : ஜனாதிபதியின் உறுதி குறித்து பன் கீ மூன் மகிழ்ச்சி

வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிச்சயம் தங்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவர் என்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி அளித்திருப்பது தமக்கு மகிழ்வைத் தருவதாக ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெர்வித்தார்.

“வவுனியா முகாம்களில் சுமார் 3 லட்சம் தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதிக்குள் அவரவர் சொந்த இடங்களில் நிச்சயம் மீள்குடியேற்றப்படுவார்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியிருக்கின்றார்.

எனது விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான தலைமைப் பொறுப்பதிகாரி லின் பாஸ்கோவிடம் அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இது அவரின் நேர்மையுடன் சம்பந்தப்பட்ட விடயமாக உள்ளது. அவர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் சந்தேகம் கொள்ள வேண்டியேற்பட்டுவிடும்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடயத்தில் நான் அதிகம் அழுத்தம் கொடுத்திருக்கின்றேன். எந்தவிதமான கால தாமதமும் இல்லாமல் இந்த அகதிகள் அனைவரும் உடனடியாகத் தத்தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்.

அவர்களின் மனித உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளும் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்றெல்லாம் நான் இலங்கைக்கான விஜயத்தின்போது வலுவான கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.

எனது பிரதிநிதியாக லின் பாஸ்கோவை அண்மையில் இலங்கைக்கு அனுப்பி வைத்தேன். இலங்கைக்கான எனது விஜயத்தின் பின் நான் கடந்த அணிசேரா மாநாட்டின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்திருந்தேன்.

அவர் எனது இலங்கை விஜயத்தின்போது எனக்கு வாக்குறுதி வழங்கியிருந்த விடயங்களைத் தவறாமல் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவரிடம் வலியுறுத்திக் கூறினேன். கடந்த வாரம் அவருடன் தொலைபேசியில் கூட உரையாடினேன். அண்மையில் எனது பிரதிநிதி லின் பாஸ்கோ மூலமாக அவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளேன். அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply