அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் வோல்டர் கெலின் சந்திப்பு

இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் விசேடப் பிரதிநிதி வோல்டர் கெலின் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனைச் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று  இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்கள் தொடர்பாகக் வோல்டர் கெலின் கேட்டறிந்து கொண்டார்.

இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களை நேரில் பார்த்து, அவர்கள் குறித்த மதிப்பீடு ஒன்றைச் செய்வதற்காகவே அவர் இங்கு வந்துள்ளார்.இது தொடர்பாகவே அவர் அமைச்சர் றிஷாத் பதியுதீனைச் சந்தித்து இடம்பெயர்ந்த மக்கள் பற்றிக் கேட்டறிந்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் மிகவும் சிறப்பாக செய்து கொடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர் றிஷாத் பதியுதீன், ஐக்கிய நாடுகள் சபை, இடம்பெயர்ந்த மக்களுக்குச் செய்து வரும் உதவிகளுக்குத் தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். எதிர்காலத்திலும் இவைபோன்ற உதவிகளை ஐக்கிய நாடுகள் சபை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன் இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும் அமைச்சர், வோல்டர் கெலினிடம் தெரிவித்தார்.அங்கு கருத்துத் தெரிவித்த விசேட பிரதிநிதி வோல்டர் கெலின், இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன் நன்றியையும் தெரிவித்தார்.

அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் எப்பொழுதும் உதவத் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம். ஹால்டீன், அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி எஸ்.எம். மொஹமட் மற்றும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply