இங்கிலாந்து மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா: இந்திய பெண் சமையல் கலைஞருக்கு அழைப்பு
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறினார். இந்த நிலையில் மன்னர் 3-ம் சார்லசின் அதிகாரபூர்வ முடிசூட்டு விழா, அடுத்த மாதம் (மே) 6-ந்தேதி நடைபெற உள்ளது.
தலைநகர் லண்டனில் கோலாகலமாக நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க உலகம் முழுவதுமுள்ள சுமார் 2,000 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் சமையல்கலைஞர் மஞ்சு மாலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
சிறப்பான தொண்டு பணிகளுக்காக வழங்கப்படும் பிரிட்டிஷ் பேரரசு பதக்கத்தை பெற்றவர் என்கிற முறையில் மஞ்சு மாலிக்கு இந்த கவுரவம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை போலவே பிரிட்டிஷ் பேரரசு பதக்கத்தை பெற்ற 800-க்கும் அதிகமான தன்னர்வலர்கள் முடிசூட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கான தொண்டு நிறுவனத்தில் சமையல்கலைஞராக பணிபுரிந்து வரும் மஞ்சு மாலி, கொரோனா காலத்தில் மூத்த குடிமக்களுக்கு செய்த சேவையை பாராட்டி அவருக்கு ராணி 2-ம் எலிசபெத், பிரிட்டிஷ் பேரரசு பதக்கத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply