பிரான்சில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 64-ஆக உயர்வு: சட்டம் அமலுக்கு வந்தது

பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முடிவு செய்தார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஓய்வு வயது அதிகரிப்பை திரும்ப பெற கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதற்கிடையே மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றாமல் சட்டமாக்கும் நடவடிக்கைகளை அதிபர் மெக்ரான் மேற்கொண்டார். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது. தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தினர். இதில் வன்முறை சம்பவங்களும் நடந்தது. அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் தொடர்பாக பிரான்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் இத்திட்டத்துக்கு கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அரசு ஊழியர் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் சட்டத்தை அதிபர் மெக்ரான் அமலுக்கு கொண்டு வந்தார். இச்சட்டத்தை அரசிதழில் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மக்களின் போராட்டங்களை மீறி சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஓய்வு வயது மசோதாவை திரும்ப பெற கோரி போராட்டங்கள் கடுமையாக நடந்து வரும் நிலையில் தற்போது சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது போராட்டக்காரர்களை ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் பிரான்சில் போராட்டங்கள் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply