ஏமனில் நிதியுதவி நிகழ்ச்சியில் குவிந்த மக்கள்: கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி
ஏமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர சவுதி ஆதரவு பெற்ற கூட்டணி அரசும் முயற்சித்தது. இந்த இரு நாடுகளின் மறைமுக போரால் அந்நாட்டில் வீரர்கள் மற்றும் மக்கள் என 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது, உலகின் மிக பெரிய மனித பேரிடரில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் (2.1 கோடி) உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக உள்ளனர். அவர்களில் 1.7 கோடி மக்கள் வறுமையின் பிடியில் வாடுகின்றனர். இந்த நிலையில், ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பை கேட்டதும் அங்குள்ள மக்கள் நிதியுதவி பெறுவதற்காக நிதியுதவி வழங்கும் இடத்தில் திரண்டனர். நேரம், செல்ல, செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்தது. கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் மக்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து கொண்டு நிதியுதவியை பெற முயன்றனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் காலேக் அல் ஆக்ரி கூறியதாவது:-
ரம்ஜான் பண்டிகையையொட்டி சிலர் இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்கவில்லை.
இதனால், திட்டமிடல் இன்றி பரவலாக நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. அதனை பெற மக்கள் முண்டியடித்ததில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 85 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தும் உள்ளனர். காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்துல் ரஹ்மான் மற்றும் யாஹியா மோசென் கூறும்போது, கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் முயற்சியாக துப்பாக்கி ஏந்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வானை நோக்கி சுட்டனர். அப்போது, மேலே மின்கம்பி மீது குண்டுபட்டு வெடித்து உள்ளது.
இதனால், அச்சமடைந்த மக்கள் தப்பிக்க நாலாபுறமும் ஓடியதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply